பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சர் வேலு , நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அரசு செயலாளர் செல்வராஜ், பொதுப்பணித்துறை அரசு கூடுதல் செயலாளர் மன்கத் ராம் சர்மா, மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, ஆகியோர் முன்னிலையில் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முதல் விவேகானந்தர் பாறை வரை சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி இழை கூண்டு பாலத்தினை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:-
முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரால் 2000 ம் ஆண்டு நிறுவப்பட்டு தற்போது வெள்ளி விழா காண இருக்கும் அய்யன் திருவள்ளுவர் சிலையும் விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் கடல்சார் நடைபாதை பாலப்பணிகள் ரூ.37 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இந்த பாலத்தின் நீளம் 77 மீட்டர் மற்றும் அகலம் 10 மீட்டர் கொண்ட பவ்ஸ்ட்ரிங் ஆர்ச் பாலம் ஆகும். இது நவீன தொழில் நுட்பத்தில் கடல் அரிப்பு கடல் காற்றின் வேகம் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது. தற்போது விவேகானந்தர் பாறையினை கண்டுகளிக்கும் சுற்றுலா பயணிகள் மீண்டும் படகு மூலம் அய்யன் திருவள்ளுவர் சிலையினை காண செல்வதால் அதிக நேரம் விரயமாகின்றது. இந்த நடைபாலம் அமைக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் எளிதாக அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு செல்லலாம். இந்த பாலத்தில் 2.5 மீட்டர் அகலமுடைய கண்ணாடி அடித்தளம் கொண்ட நடைபாதை அமைக்கப்பட உள்ளது. இதனால் கடலின் அழகினை சுற்றுலா பயணிகள் நடந்தவாறே கண்டு ரசித்து மகிழலாம். மேலும் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மற்றும் மாவட்டத்தின் வருவாய் வளர்ச்சியும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து தமிழ்நாடு முதலமைச்சரால் ஜனவரி 1 -2025 அன்று பாலம் திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்பதை இந்த தருணத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வேலு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆய்வுகளில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ் (குளச்சல்). ராஜேஷ்குமார் (கிள்ளியூர்), முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், கண்காணிப்பு செயற்பொறியாளர் (திருநெல்வேலி) சராதா, நெடுஞ்சாலைத்துறை கோட்ட செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி (கன்னியாகுமரி), சண்முகநாதன் (திருநெல்வேலி), நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர்கள் ஜெரால்டு ஆண்டனி (நாகர்கோவில்), விஜயா (தக்கலை), வெனிஸ் (தோவாளை), பிரவீன் குமார் (குழித்துறை), உதவி செயற்பொறியாளர்கள் முருகேசன் (கட்டடம் மற்றும் பராமரிப்பு), ராஜலெட்சுமி (மின்னியல்), மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்கள் அரவிந்த் (நாகர்கோவில்), ரெஜ்வின் (தக்கலை), பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் சந்திரசேகரன், நாகர்கோவில் மாநகராட்சி மண்டல தலைவர் ஜவஹர், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் அருண்காந்த், வட்டார மருத்துவக்குழு உறுப்பினர் பாபு, துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.