தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு தீயணைப்பு
மீட்புப்பணிகள் துறையின் சார்பில் நாகர்கோவில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல்
கல்லூரி வளாகத்தில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை
குறித்த மாதிரி ஒத்திகை பயிற்சி முகாம் நடந்தது.
இந்த ஒத்திகை முகாமினை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்,
நேரில் பார்வையிட்டு பேசுகையில் –
பேரிடர் காலங்களில் வருவாய் துறை, காவல் துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட
துறைகள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து பல்வேறு பயிற்சி
வகுப்புகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக கன்னியாகுமரி மாவட்ட தீயணைப்பு மீட்புபணிகள் துறையின்
சார்பில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
குறித்து மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நேரடியாக நடத்தப்பட்டது. இந்த ஒத்திகை நிகழ்ச்சி
வாயிலாக தீ விபத்து ஏற்படும்போது மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள்
குறித்தும், அவ்விபத்திலிருந்து நம்மை எப்படி காப்பாற்றி கொள்வது என்பது தொடர்பாகவும்
மாணவ, மாணவிகளிடையே நிகழ்த்தப்பட்டது.
மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தை
பொறுத்த வரை சுமார் 72 கி.மீ கடற்கரை பகுதியை உள்ளடக்கியதாகும். மழை மற்றும் கடல்
சீற்றம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மீனவர்கள் மற்றும் கடலோர பகுதிகளில் வசிக்கும்
குடும்பங்களை காப்பாற்றுவது குறித்தும் ஒத்திகை நடத்தப்பட்டது.
கடற்கரை பகுதியை போன்று நமது மாவட்டம் அதிகமான மலைப்பகுதிகள் நிறைந்த
பகுதியாகும். அந்த வகையில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையின்போது ஏற்படும்
பேரிடர் காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பது, பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகளில்
அதிக அளவு தண்ணீர் தேங்கும்போது மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும்
எடுத்துரைக்கப்பட்டது.
குறிப்பாக கட்டிடம் மற்றும் ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி மீட்டல், நைலான் வலை
மூலம் மீட்டல், சிறப்பு தளவாடங்கள் மற்றும் மீட்பு உபகரணங்கள் செயல்முறை விளக்கம்,
கயிறு ஏறுதல், தீயணைப்பு கருவிகள் உபயோகிக்கும் முறை, மரப்பொருள்கள் தீயணைக்கும்
முறை, வீட்டில் கிடைக்கும் தண்ணீரில் மிதக்கும் பொருட்கள் விளக்கப்படம் உள்ளிட்ட
பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகள் தீயணைப்பு வீரர்களால் நடத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட
ஆட்சியாளர் ஸ்ரீதர், பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்யகுமார், உதவி
மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் இம்மானுவேல், துரை, அரசு பொறியியல்
கல்லூரி முதல்வர் பிரகாசி அருள்ஜோதி, உடற்கல்வி இயக்குநர் சாகுல் ஹமீது,அஜி,ஜோதி ரவீந்திரன், அமுதன்,
கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள், தீயணைப்பு துறை வீரர்கள் உட்பட பலர்
கலந்து கொண்டார்கள்.