நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வலம்புரிவிளை குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீயிணை அணைக்கும் பணியில் ஈடுப்பட்ட வீரர்களை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் சந்தித்து கவுரவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வலம்புரிவிளை உரங்கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்;ட வீரர்களை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலையில் பொன்னாடை போர்த்தி தெரிவிக்கையில்-
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவங்கள், உணவகங்கள் உள்ளிட்டவைகளில் ஒவ்வொரு நாளும் டன் கணக்கில் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வலம்புரிவிளை பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்த குப்பை கிடங்கில் கடந்த 7.2.2025 அன்று திடீரென தீ ஏற்பட்டது. மேலும் தீ பரவாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் மற்றம் மாவட்ட தீயணைப்பு அலுவலருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. வலம்புரிவிளை உரக்கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீயினை போர்கால அடிப்படையில் அணைக்கும் பணியினை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினேன்.
மேலும் தீயினால் அந்தபகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்து, பொதுமக்கள், அருகாமையில் உள்ள பள்ளிகள், வாகன ஓட்டிகள் உள்ளிட்டவர்களுக்கு நோய் தொற்று பரவும் சூழலை தடுக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் தலைமையில் 14 நிலை அலுவலர்கள், 145 இதர பணியாளர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட மாநகராட்சி பணியாளர்கள் இணைந்து தீயணைக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டனர்.
மேலும் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயணைக்கும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து நாகர்கோவில், தக்கலை, திங்கள் சந்தை, கன்னியாகுமரியில் இருந்து என 4 தீயணைப்பு வாகனங்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பாளையங்கோட்டை, வள்ளியூர் என 2 தீயணைப்பு வாகனங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி சிப்காட் மற்றும் கழுகுமலையில் இருந்து 2 வாகனங்கள், தென்காசி மாவட்டத்தில் இருந்து கடையநல்லூர், சேரன்மகாதேவி, ஆலங்குளத்தில் இருந்து 3 தீயணைப்பு வானங்கள் என மொத்தம் 11 தீயணைப்பு வாகனங்கள், ஆறு கிட்டாச்சிகள் பத்துக்கு மேற்பட்ட டேங்கர் லாரிகள் தீயணைக்கும் பணிக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளன.
தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் குப்பை கிடங்கில் முகாமிட்டு தீயணைக்கும் பணியை கண்காணித்து வந்தார். தீயணைக்கும் பணியில் உள்ள வீரர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் உடனுக்குடன் செய்து கொடுக்கப்பட்டன. அதன் விளைவாக இன்று தீ அணைக்கப்பட்டுவிட்டது. தீயணைக்கும் பணியில் ஈடுப்பட்ட அனைத்து பணியாளர்களையும் மனதார பாராட்டுகிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தெரிவித்தார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா கன்னியாகுமரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்திய குமார் தலைமையில் தீயிணை அணைத்த அனைத்து வீரர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் சத்திய குமார் (கன்னியாகுமரி), வினோத் (திருநெல்வேலி), உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் இம்மானுவேல், தீயணைப்பு பணியாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்
தீயணைப்பு வீரர்கள் கவுரவிப்பு
