இந்திய அஞ்சல் துறை சார்பாக, திருநெல்வேலி அஞ்சல் கோட்டத்தில், அஞ்சல் சேவையைப் பயன்படுத்த வரும் பாலூட்டும் தாய்மார்கள் பயனுறும் வகையில், பாலூட்டும் அறையை தென் மண்டல அஞ்சல் துறைத் தலைவர் ஜெயசங்கர் பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் துவக்கி வைத்தார். வங்கி, பார்சல், ஆதார் மற்றும் இதர அஞ்சல் சேவையைப் பயன்படுத்த வரும் பாலூட்டும் இளம் தாய்மார்கள் இந்த தனிப்பட்ட, சுகாதாரமான பாலூட்டும் அறை வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வசதி தென் மண்டல அஞ்சல் துறையிலேயே முதன் முதலாக பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் செய்யப்பட்டு இருக்கிறது என்று திருநெல்வேலி அஞ்சல் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.
ஆதார் சேவையைப் பயன்படுத்த பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்திற்குத் தனது கைக்குழந்தையுடன் வந்திருந்த அஞ்சல் வாடிக்கையாளப் பெண்மணி ஒருவர், இந்தத் தாய்மார்கள் பாலூட்டும் அறை தக்க சமயத்தில் தனது குழந்தையின் பசியாற்ற மிகவும் பேருதவியாக இருந்தது என்று தெரிவித்தார்.