தேசிய அஞ்சல் வார விழா

Share others

நாடு முழுவதும் தேசிய அஞ்சல் வார விழாவானது அக்டோபர் 9ம் தேதி முதல் 13ந் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திலும் அக்டோபர் 9ம் தேதி உலக அஞ்சல் தினமானது “நம்பிக்கையுடன் ஒன்றிணைவோம்” என்ற கருப்பொருளில் கொண்டாடப்பட்டது. இதில் உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு நாகர்கோவில், தக்கலை தலைமை அஞ்சலகங்கள் மற்றும் கன்னியாகுமரி, சுசீந்திரம் அஞ்சலகங்களில் துறையின் பல்வேறு சேவைகள் குறித்து அஞ்சல் பயனாளிகளின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

மேலும் 10ம் தேதி முதல் 13ந் தேதி வரை பின்வரும் அஞ்சல் வார விழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளதாக கன்னியாகுமரி அஞ்சல் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார்  தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 10 – நிதி வலுவூட்டல் நாள்

மத்திய மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மற்றும் அஞ்சல் துறையின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவானது வள்ளவிளை (கொல்லங்கோடு) புனித மாதா சமூக கூடத்தில் வைத்து மாலை 3 மணி முதல் 5 மணி வரை நடத்தப்படுகிறது. இவ்விழாவில் மக்கள் அஞ்சல் ஆயுள் காப்பீடு, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, ஆதார் சேவைகள், சிறுசேமிப்பு திட்டங்கள், பிரதம மந்திரியின் ஓய்வூதிய திட்டம் மற்றும் காப்பீடு திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ளவும், அதில் இணைந்து பயன் பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் காலை 8 மணி முதல் மாலை 0730 மணி வரை பொது மக்களின் ஆதார் சேவைகளின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் மேற்கூறிய இடத்தில் ஆதார் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் 11 – தபால் தலை சேகரிப்பு நாள்

11 ஆம் தேதி புதன் கிழமை தபால் தலை சேகரிப்பு நாளாக கொண்டாடடப்படுகிறது. இந்நிகழ்வை முன்னிட்டு தபால் தலை சேகரிப்பு கருத்தரங்கு காலை 11 மணிக்கு தக்கலை தலைமை தபால் நிலையத்தில் வைத்து நடைபெறும். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு வினாடி வினா போட்டி நடைபெறும் மற்றும் தபால் தலை கண்காட்சியும் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளின் பார்வைக்காக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் 12 – அஞ்சல்கள் மற்றும் பார்சல்கள் நாள்

அஞ்சல் மற்றும் பார்சல் சேவைகளை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட புதிய முயற்சிகளைப் பற்றி வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கவும், வழங்கப்படும் சேவைகள் குறித்து அவர்களின் கருத்துக்களை பெறவும் அஞ்சல் வாடிக்கையாளர் சந்திப்பு நாகர்கோவில், தக்கலை தலைமை அஞ்சலகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அஞ்சல் துறையின் ஊழியர்களுக்கு குறிப்பாக தபால்காரர்களுக்கு பட்டுவாடா திறன் மேம்பாடு பற்றிய விழிப்புணர்வு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் 13 – சாமானியர் நல்வாழ்வு தினம்

வணிகவள மேம்பாடு மற்றும் அஞ்சல் வாடிக்கையாளர்களின் சேவை தரத்தை உயர்த்தவும், வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்யவும் வாடிக்கையாளர் சந்திப்பு கன்னியாகுமரி கோட்ட அலுவலகத்தில் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் தலைமையில் நடத்தப்பட உள்ளது. மேலும் பொது மக்களின் ஆதார் சேவைகளின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் கீழ்காணும் இடங்களில் ஆதார் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இடம் நாள்
அரசு மேல் நிலை பள்ளி, உண்ணியூர்கோணம், குலசேகரம். 13.10.2023 & 14.10.2023.
பஞ்சாயத்து அலுவலகம், களியல் 12.10.2023 & 14.10.2023.
பஞ்சாயத்து அலுவலகம், தாழக்குடி 13.10.2023 & 14.10.2023.

பொதுமக்கள் அனைவரும் அஞ்சல் வார விழாவின் நிகழ்வுகளில் கலந்து கொண்டு அஞ்சல் துறையின் சேவைகள் பற்றிய விழிப்புணர்வையும் ஆதார் தொடர்பான தங்களின் தேவைகளையும் பூர்த்தி செய்து பயன் பெறுமாறு கன்னியாகுமரி அஞ்சல் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர்  செந்தில் குமார்  தெரிவித்துள்ளார்.

Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *