சட்ட சேவைகள் அதிகாரச் சட்டம் 1987 அக்டோபர் 11 ந் தேதியன்று இயற்றப்பட்டது. இந்த சட்டம் 1995 நவம்பர் 9 ந் தேதியன்று நடைமுறைக்கு வந்தது. சட்ட சேவைகள் அதிகாரச் சட்டம் அமலுக்கு வந்த பின்னர் தேசிய சட்ட சேவைகள் ஆணையம் 1995 டிசம்பர் 5 ந் தேதியன்று தொடங்கப்பட்டது.தேசிய சட்ட சேவைகள் தினம் என்பது சட்ட சேவைகள் அதிகாரச் சட்டம் அமலுக்கு வந்ததை நினைவு கூறும் வகையில் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 9 ந் தேதி கொண்டாடப்படுகிறது. தேசிய சட்ட சேவைகள் நாளினை முன்னிட்டு சட்டப் பணிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் முதன்மை மாவட்ட நீதிபதி கார்த்திகேயன் விழிப்புணர்வு பிரச்சார நடமாடும் காணொளி வாகனத்தை கொடியசைத்து அனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் கூடுதல் மாவட்ட நீதிபதி ஜோசப் ஜாய் , குடும்பநல நீதிபதி சுதாகர் , தலைமை குற்றவியல் நீதிபதி கோகுலகிருஷ்ணன் , மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்/சார்பு நீதிபதி ஆஷா கௌசல்யா சாந்தினி மற்றும் ஏனைய நீதிபதிகள், நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் மற்றும் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.