தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் மண்டல திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் இயக்குநரகம் சார்பாக நாகர்கோவில், கோணத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வைத்து நவம்பர் 10-ம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணி முதல் பிரதம அமைச்சரின் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் பிஎம்என்ஏஎம் நடைபெற உள்ளது.
மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில் ஐ.டி.ஐ தேர்ச்சிப் பெற்று தற்போது வரை தொழிற்பழகுநர் பயிற்சி பெறாத பயிற்சியாளர்களும், தொழிற்பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு தொழிற்பழகுநர் சட்டம் 1961-ன் கீழ் தொழிற்பழகுநர் பயிற்சி வழங்க விரும்பும் தொழில் நிறுவனங்களும் கலந்து கொள்ளலாம்.
இதில் பங்கேற்று தேர்வு பெறும் ஒரு வருட தொழில் பிரிவுகளில் தொழிற்பயிற்சியினை நிறைவு செய்த பயிற்சியாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7700 மற்றும் இரு வருட தொழில் பிரிவுகளில் தொழிற்பயிற்சியினை நிறைவு செய்த பயிற்சியாளர்களுக்கு ரூ.9600 தொழிற்பழகுநர் பயிற்சி காலத்தில் உதவித்தொகையாக வழங்கப்படும். தொழிற்பழகுநர் பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்யும் தொழிற்பழகுநர்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்ற தேசிய தொழிற்பழகுநர் சான்று வழங்கப்படும். இந்த சான்று பெற்றவர்கள் பொதுத்துறை மற்றும் பெரிய தொழில் நிறுவன வேலைவாய்ப்புகளில், ஐ.டி.ஐ. முடித்து தேசிய தொழிற்சான்று பெற்றவரை விட முன்னுரிமை பெற்றவராக கருதப்படுவர்.
தொழிற்பழகுநர் சட்டம் 1961-ன் படி குறைந்தபட்சம் 30 பணியாளர்களுடன் இயங்கும் அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் தொழிற்பழகுநர் இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்து தொழிற்பழகுநர் திட்டத்தினை செயல்படுத்துவது கட்டாயம் என்பதால், அரசின் சட்ட நடவடிக்கைகளை தவிர்க்கும் வகையில் மேற்படி குறைந்த பட்ச பணியாளர்களுடன் இயங்கும் தொழில் நிறுவனங்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தொழிற்பழகுநர் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.
ஐ.டி.ஐ.யில் சேர்ந்து பயிற்சி பெற முடியாத 8, 10, 12-ம் வகுப்பு பட்டய மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் நேரடியாக தொழிற்சாலைகளில் புதிய பழகுனராக சேர்ந்து 3 முதல் 6 மாத கால அடிப்படை பயிற்சியும், ஓராண்டு முதல் 2 ஆண்டுகள் வரை தொழிற்பழகுனர் பயிற்சி பெற்று தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம். குறைந்தபட்சம் 4 முதல் 29 பணியாளர்களுடன் இயங்கும் தொழில் நிறுவனங்கள் தங்கள் முழு விருப்பத்தின் பேரில் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் இணைவதன் மூலம் திறன் வாய்ந்த மனிதவளம் தொழில் நிறுவனங்களுக்கு கிடைக்கப்பெறுவதுடன், ஒரு தொழிற்பழகுநருக்கு வழங்கப்படும் மாதாந்திர ஊக்கத்தொகையில் 25 சதவீத தொகை அல்லது அதிகபட்சமாக ரூ.1500 வீதம் அனைத்து தொழில் பழகுநர்களுக்கான ஊக்கத்தொகை கணக்கிடப்பட்டு ஒன்றிய அரசால் சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மீள வழங்கப்படும்.எனவே ஐ.டி.ஐ. முடித்த பயிற்சியாளர்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திட தங்கள் விவரங்களை https://www.apprenticeshipindia.gov.in/login இணையதளம் மூலம் பதிவு செய்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது. மேலும் விவரங்களுக்கு நாகர்கோவில், கோணம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இயங்கும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தினை நேரிலோ அல்லது 04652-264463, 9443579558 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தெரிவித்து உள்ளார்.
தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
