தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகர்புற நலவாழ்வு மைய கட்டிடங்களை திறந்து வைத்ததைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா குத்துவிளக்கேற்றி தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் இருந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருவிளை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகர்புற நலவாழ்வு மைய கட்டிடங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்ததைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசுகையில்-
தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டு உள்ள 50 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 208 நகர்புற நலவாழ்வு மையங்களையும் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்து சிறப்பித்தார். அதன் ஒருபகுதியாக தமிழ்நாடு முதலமைச்சர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.2.45 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு உள்ள 1 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் 5 நகர்புற நல வாழ்வு மையங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு துறைக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினாலும் மருத்துவ துறைக்கு என பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் கட்டிடங்களை திறந்து வைத்து உள்ளார். நகர்ப்புறத்தில் சுமார் 60 சதவீதம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் 5 ஆயிரத்துக்கு மேல் மக்கள் தொகை உள்ள பகுதிகளில் கிராம சுகாதார நிலையமும், 15000 முதல் 20 ஆயிரம் மேல் மக்கள் தொகை உள்ள பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையமும், 50 ஆயிரத்துக்கு மேல் பொதுமக்கள் உள்ள பகுதிகளில் அரசு தலைமை மருத்துவமனையும் உள்ளன. நகர்புற பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் தனியார் மருத்துவமனையினை அணுகமால் தாங்கள் வசிக்கும் பகுதிகளிலே காய்ச்சல், தலைவலி மற்றும் தொற்றா நோய்கள் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை பெறும் வகையில் நகர்புற நல வாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற மருத்துவ வசதிகள் இந்தியாவிலே தமிழ்நாட்டில் தான் அதிகளவு உள்ளது.
தொற்றா நோய்களான உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோய்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை என உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளும் போது சில நோய்களை ஆரம்ப காலகட்டங்களிலேயே கண்டுப்பிடிக்க முடியும். எனவே அனைவரும் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருவிளை பகுதியில் ரூ.1.20 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்சேய் நல மருந்துவம், குழந்தைகள் மற்றும் பொது நல மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம், விபத்து மற்றும் தீ காய சிகிச்சை, ஆய்வக சேவை, நாய்கடி மற்றும் பாம்பு கடி சிகிச்சை, முதலுதவி சிகிச்சை, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன், இசிஜி, பேறுகால முன் மற்றும் பின் கவனிப்பு, ஆம்புலன்ஸ் சேவைகள், காசநோய் சிகிச்சை, கண் பரிசோதனைகள், வளர்இளம் பருவத்தினருக்கான ஆலோசனைகள், புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட உள்ளன.
மேலும் பெருவிளை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் வாயிலாக கிறிஸ்டோபர் நகர், பெருவிளை, ஆசாரிப்பள்ளம், பள்ளவிளை, கோட்டவிளை, வெள்ளமண் ஓடை, சுங்கான்கடை உட்பட சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள சுமார் 50,000 பயனாளிகள் பயன்பெறுவார்கள். மேலும் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணன்கோவில் மேல தெருகரை, ஹௌவிங் போர்டு, புத்தன்பங்களா, இலுப்பையடி காலனி, சி.டிம்.எம் புரம் ஆகிய 5 இடங்களில் தலா ரூ.25 லட்சம் மதிப்பில் நகர்புற நலவாழ்வு மையங்களை தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்து உள்ளார்.
இந்த நகர்புற நலவாழ்வு மையங்களில் கர்பக்கால மற்றும் பிரசவ கால சேவை, சிசு மற்றும் குழந்தைகள் நல சேவை, குடும்ப நல சேவை, தொற்றும் மற்றும் தொற்றா நோய்களுக்கான சேவை, மனநோய் கண்டறிதல், கண், காது, மூக்கு, தொண்டை சிகிச்சை, பல்நோய் சிகிச்சை, விபத்து மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை, முதியோர் சிகிச்சை உள்ளிட்ட 12 வகையான சிகிச்சைகள் வழங்கப்படும். புதிதாக திறந்து வைக்கப்பட்டு உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகர்புற நல வாழ்வு மையங்களை பொதுமக்கள் அணுகி பயன்பெற கேட்டுக்கொள்கிறேன். இந்த புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகர்புற நல வாழ்வு மையங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, பேசினார்.
நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, மாவட்ட சுகாதார அலுவலர் பிரபாகரன், துணை மேயர் மேரி பிரின்சி லதா, நாகர்கோவில் மாநகராட்சி நகர்நல அலுவலர் ஆல்பர் மதியரசு, மண்டல தலைவர் செல்வகுமார், நிர்வாக பொறியாளர் ரெகுராமன், உதவி பொறியாளர் தேவி கண்ணன், மாநகராட்சி கண்காணிப்பு அலுவலர் பகவதி பெருமாள், மாமன்ற உறுப்பினர்கள் அருள் சபிதா ரெக்சலின், விஜிலா ஜஸ்டஸ், அமலசெல்வன், தங்கராஜா, உள்ளிட்ட உறுப்பினர்கள், அகஸ்தீஸ்சன், சரவணன், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.