
நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற 6வது புத்தக கண்காட்சியினை இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டு உள்ளார்கள் – மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, பெருமிதம்
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்திய நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 6-வது புத்தகத்திருவிழா கண்காட்சி நிறைவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம் முன்னிலையில் கலந்து கொண்டு பேசுகையில்:-

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு உட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத்திருவிழா கண்காட்சி நடத்த வேண்டும் என அறிவுறுத்தியதன் அடிப்படையில் கடந்த 19.2.2025 முதல் இன்று (1.3.2025) வரை தொடர்ந்து 11 நாட்கள் புத்தக கண்காட்சி நடைபெற்ற புத்தகத்திருவிழாவில் ஆர்வமுடன் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கிய அனைவருக்கும் நன்றி. நமது மாவட்டத்தில் புத்தகக்கண்காட்சி அமைக்க வேண்டும் என்று முடிவு செய்யபட்ட உடன் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு முன்பாகவும், பொதுமக்கள் அனைவரும் வருகை தரும் வகையிலும் ஒரு இடத்தில் புத்தக கண்காட்சி நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
அதனடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலரின் தலைமையில் மாவட்ட நேர்முக உதவியாளர் பொது, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட நூலக அலுவலர் உள்ளிட்ட அனைவரும் இணைந்து இந்த புத்தக கண்காட்சியை இங்கு எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டு மிகச்சிறப்பாக மாவட்ட வருவாய் அலுவலரின் தலைமையில் துறை அலுவலர்களின் முழு பங்களிப்புடன் நடைபெற்று உள்ளது அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த ஆண்டை விட இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் ஆறாவது புத்தக கண்காட்சியை வந்து பார்வையிட்டு உள்ளார்கள்.
மேலும் மாவட்ட வன அலுவலர் அவருடைய முழு பங்களிப்பை புத்தகக் கண்காட்சிக்காக வழங்கி உள்ளார்கள் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் சார்பில் புத்தகத்திருவிழா குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோ விளம்பரங்கள், வரி ரசீதுகளில் புத்தகக்கண்காட்சி குறித்த விளம்பரங்கள் உள்ளிட்டவைகள் மூலம் பொதுமக்களிடையே புத்தகக்கண்காட்சி குறித்த செய்தியை தெரிவித்து உள்ளார்கள். நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கும், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் உதவி இயக்குநர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்தபடியாக ஆவின் நிறுவனமானது தங்களுடைய பால் பாக்கெட்டுகளில் புத்தகத்திருவிழா குறித்து விழிப்புணர்வு வார்த்தைகளை இடம்பெறச்செய்தார்கள் அவர்களுக்கும், தீயணைப்பு துறையினர் 24 மணி நேரமும் புத்தகக்கண்காட்சி நடைபெறும் திடலில் இருந்தார்கள் அவர்களுக்கும், மின்சார துறையினருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மகளிர் சுய உதவிக்குழுக்களின் மூலம் கைவினைப்பொருட்கள் கண்காட்சி, பாரம்பரிய உணவுகள் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டன.
தொடர்ந்து இன்றைய தினம் அதிகளவில் மக்கள் புத்தகங்களை ஆர்வமுடன் வாங்கி சென்றுள்ளார்கள். புத்தகக்கண்காட்சி அரங்குகளில் புத்தகங்களை காட்சிப்படுத்திய பதிப்பாளர்கள், நிறுவனம், ஒவ்வொரு நாளும் கருத்துரை ஆற்றிய பேச்சளார்கள், துறை சார்ந்த அலுவலர்கள், பள்ளிகல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்திய மாணவ மாணவியர்கள், அவர்களை வழிநடத்திய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட அத்தனை பேருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
குறிப்பாக பள்ளிக்கல்லூரி மாணவ மாணவியர்கள் இப்புத்தகக்கண்காட்சியில் அதிகளவில் கலந்து கொண்டுள்ளார்கள். மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு அரசு துறைகளை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் குடும்பத்துடன் கலந்துகொண்டு புத்தகங்களை வாங்கி உள்ளார்கள். பொதுநிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் உள்ளிட்டோரும் தங்களது பங்களிப்பினை அதிகளவு செலுத்தி உள்ளார்கள். தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 11 (1.3.2025) நாட்கள் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 75 அரங்குகளை அதிகமானோர் பார்வையிட்டதோடு, சுமார் ரூ.70 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை மதிப்பில் புத்தகங்கள் விற்கப்பட்டன என எதிர்பார்க்கப்படுகிறது என்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகிதா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி, துணை ஆட்சியர் பயிற்சி பிரியா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட நூலக அலுவலர் மேரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) செந்தில்வேல்முருகன், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சேக் அப்துல் காதர், உதவி இயக்குநர் பேரூராட்சி இராமலிங்கம், உசூர் மேலாளர்கள் சுப்பிரமணியம் (நிதியியல்), வட்டாட்சியர்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.