கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூபாய் 17 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவிக்கையில்,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியின் கீழ் நடந்து வரும் மற்றும் நிறைவுற்ற பணிகள் என பல்வேறு பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவற்றில் மூலத் தான நிதியின் கீழ் ரூபாய் 2.5 கோடி மதிப்பில் கோணம் வேலை வாய்ப்பு அலுவலகத்தின் எதிரில் இளையோர்களின் வளர்ச்சிக்காக நூலக பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு புன்னை நகர் பகுதியில் ரூ. 1.76 கோடி மதிப்பிலும் ரூபாய் 1.53 கோடி மதிப்பில் வட்டக்கரை ஏ.ஆர்.கே பகுதியில் முடிவுற்ற தார்சாலை பணியினை ஆய்வு செய்வதோடு சாலையின் தரம் ஆய்வு செய்யப்பட்டது. மாநகராட்சியின் பொது நிதியின் கீழ் குழந்தைகள் மையம் மற்றும் அங்கன்வாடி மையத்தினையும் ஆய்வு செய்தார்.
அம்ருத் திட்டத்தின் கீழ் ரூபாய் 47.60 லட்சம் மதிப்பில் வட்டவிளை சூர்யா நகர் குளம் தூர்வாரி சீரமைக்கப்பட்டு உள்ளதையும் மற்றும் ரூபாய் 30 லட்சம் மதிப்பில் பெதஸ்தா குளம் பணிகளையும் பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து மூலதன நீதியின் கீழ் ரூ. 2 கோடி மதிப்பில் 11 கடைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையம் ( ஆம்னி பஸ் நிலையம் ) கட்டுமான பணிகளையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் ரூபாய் 10.7 கோடி மதிப்பில் வலம்புரி விளை திடக்கழிவு மேலாண்மை மையத்தில் மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகளை பிரித்து உயிர் உரம் தயாரிக்கப்படுவதை குறித்தும் பொதுமக்கள் அனைவரும் பொறுப்புடன் குப்பைகளை தூய்மை பணியாளர்களிடம் வழங்கி நமது மாவட்டத்தில் குப்பை இல்லா மாவட்டமாகவும் பேரிடர் அபாயங்களில் இருந்து காத்திட உறுதுணையாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்து உள்ளார்.
நடைபெற்ற ஆய்வுகளில் நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகப் பொறியாளர் பாலசுப்பிரமணியம், உதவி பொறியாளர் தேவி கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.