கன்னியாகுமரி மாவட்டம் முன்சிறை அருகே பிறந்து சில மணி நேரம் ஆகிய குழந்தை ரோட்டோரத்தில் புதரில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்சிறை ஜங்ஷனில் இருந்து முன்சிறை கிராம அலுவலகம் வழியாக களியக்காவிளைக்கு ஒரு ரோடு செல்கிறது. இந்த ரோடு வழியாக இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மூலம் ஏராளமானவர்கள் கேரளா செல்கின்றனர். இதனால் இந்த ரோடு மிகவும் பரபரப்பு மிகுந்த ரோடாகவே இருந்து வருகிறது. சம்பவத்தன்று இந்த ரோட்டில் கிராம அலுவலகத்தின் அருகில் யாரோ பிறந்து சில மணி நேரம் ஆகிய குழந்தையை புதரில் போட்டு சென்று உள்ளனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் ரோட்டோரத்தில் குழந்தை கிடப்பதை பார்த்து வாகனங்களை நிறுத்தி குழந்தையை என்ன செய்வது என யோசித்து கொண்டிருந்த நிலையில் ஒரு குழந்தை கிடப்பதாக புதுக்கடை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த நிலையில் இந்த ரோடு வழியாக குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக பணியாளர்கள் வாகனத்தில் வந்து உள்ளனர். இதை பார்த்த பொதுமக்கள் வாகனத்தை தடுத்து நிறுத்தி குழந்தையை எடுத்து செல்ல வேண்டும் என கூறினர். அப்போது எஸ் எஸ் ஐ செல்லத்துரை, ஏட்டு கிங்ஸ்லி ஆகியோர் வந்தனர் .இவர்கள் குழந்தைகள் நலத்துறை பணியாளரிடம் நாங்கள் உங்களுடன் வருகிறோம் என கூறி அதே வாகனத்தில் குழந்தையை பத்திரமாகக் கொண்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ஒரு குழந்தை கொலை செய்யப்பட்ட சோக சம்பவம் நடந்து ஒரு சில நாட்களே ஆன நிலையில் பிறந்து சில மணி நேரமாகிய குழந்தை புதரில் வீசப்பட்ட சம்பவம் இப்போது மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.