விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடையால் பேரூராட்சி கடையால் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 19.65 லட்சம் மதிப்பீட்டில் 132 பெஞ்ச் , டெஸ்க்களை விஜயதரணி எம்எல்ஏ வழங்கினார் . சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதியின் கீழ் கடையால் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பெஞ்சு டெஸ்க்கள் வழங்கப்பட்டன. இப்பள்ளியில் 518 மாணவர்கள் ஆறாவது வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர் . இப்பள்ளி மாதிரி பள்ளியாக அறிவிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது . இப்பள்ளிக்கு விஜயதரணி எம்எல்ஏ சட்டமன்றத்தில் குரல் கொடுத்து நான்கு வகுப்பறை கட்டிடங்கள் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 85.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது . இப்பள்ளியில் 2022-2023 ம் ஆண்டு பத்தாவது மற்றும் 12 வது வகுப்புகளில் படித்த அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர் . 100 சதவிகித வெற்றிக்கு கடுமையாக உழைத்த தலைமையாசிரியர் மற்றும் ஆசிரிய பெருமக்களை பெரிதும் பாராட்டினார் . இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் ஒழுக்கமுடனும் சிறந்த பண்பாடுடனும் கல்வி கற்றலையே குறிக்கோளாக கொண்டு கல்வி பயின்று வருவது இப்பள்ளிக்கும் கடையால் பகுதிக்கும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் பெருமையாக உள்ளது எனவும் மாணவர்கள் உடல் நலத்தையும் பேணுகின்ற அளவில் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி விளையாடி தங்கள் உடல் நலத்தையும் மனவளத்தையும் பேணி காத்து வருவதும் சமூக அக்கறையோடு மாணவர்களின் செயல்பாடு அமைந்திருப்பது பாராட்டுதற்குரியது இதற்கு காரண கர்த்தாவாக விளங்குகின்ற ஆசிரிய பெருமக்களே நான் பெரிதும் பாராட்டுகிறேன் என தனது உரையில் குறிப்பிட்டார் . மாணவ மாணவிகள் விஜயதரணி எம்எல்ஏ யிடம் ஆட்டோகிராப் வாங்கியது நெகிழ்ச்சியாக இருந்தது . இந்த கல்வியாண்டில் மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்று உயர் கல்வி பயின்று தங்கள் வாழ்க்கையை வளமாக்கி கொள்ள வேண்டும் என வாழ்த்து கூறினார் .