வில்லுக்குறியில் பள்ளி மாணவனை வெள்ளம் இழுத்துச் சென்ற விவகாரத்தில் மாணவனின் மருத்துவச் செலவை அரசு ஏற்பதுடன், ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 22-ம் தேதி தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்தப் போவதாக சிபிஐஎம்எல் விடுதலைக் கட்சி மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து செய்தியாளர்களிடம் கூறினார்.
குமரி மாவட்டம் முழுவதும் கடந்த 17ம் தேதி பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வில்லுக்குறி ஜங்ஷன் தேசிய நெடுஞ்சாலையை மழை வெள்ளம் சூழ்ந்ததால் வாகனங்கள் மிதந்தபடி சென்றன. பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் தாயுடன் வந்த பள்ளி மாணவன் இழுத்து செல்லப்பட்டான். கடுமையான போராட்டத்திற்கு பின் மாணவன் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறான்.
இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மழை நீர் ஓடையை சரியாக பராமரிக்காததால்தான் இந்த சம்பவம் நடந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து சிபிஐஎம்எல் விடுதலைக் கட்சி சார்பில் நேற்று பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன போராட்டம் நடத்த போவதாக மாவட்ட செயலாளர்கள் அந்தோணிமுத்து அறிவித்திருந்தார். நேற்று மதியம் முதல் கனமழை பெய்ததால் போராட்டத்தை கைவிட்டு விட்டு செயல் அலுவலரிடம் மனு கொடுக்க சென்றனர். ஆனால் செயல் அலுவலர் இல்லாததால் மனு கொடுக்காமல் திரும்பி சென்று விட்டனர். இதையடுத்து அவர் கட்சி நிர்வாகிகளுடன் மாணவன் இழுத்து செல்லப்பட்ட மழைநீர் ஓடையை பார்வையிட்டார்.
பின்னர் சிபிஐஎம்எல் விடுதலைக்கட்சி மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது; வில்லுக்குறி ஜங்ஷனில் உள்ள மழை நீர் ஓடையில் உள்ள குடிநீர் குழாய்கள், கேபிள்கள், மணல் குவியல்களை அகற்றி ஆழப்படுத்தி சீரமைக்க வேண்டும். வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மாணவனின் சிகிச்சை செலவை அரசு ஏற்க வேண்டும். மாணவனுக்கு ரூ 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மாணவனை வெள்ளம் இழுத்து சென்றபோது அவனது புத்தகப்பையையும் மழை வெள்ளம் அடித்துச் சென்று விட்டது. எனவே மாணவன் படிப்புக்கான புத்தகம், நோட்புக், பேக் உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற தவறினால் பொதுமக்களை திரட்டி வருகிற 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்துவோம் என்றார்.