குழித்துறை மறைமாவட்ட ஆயராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமிக்கப்பட்ட
தேர்வுநிலை ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் பிப்ரவரி 22 ம் தேதி வியாழக்கிழமை மாலை 4
மணிக்கு நட்டாலம் தூய தேவசகாயம் திருத்தலத்தில் திருத்தந்தையின் இந்தியா மற்றும்
நேபாள நாடுகளுக்கான தூதர் பேராயர் லியோபோல்டோ ஜிரெல்லி முன்னிலையில் மதுரை
பேராயரும் தற்போதைய குழித்துறை மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகருமான பேராயர்
அந்தோனி பாப்புசாமி அவர்களால் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட உள்ளார். இந்த நிலையில்
புதிய ஆயர் அணிந்து கொள்ள மைட்டர் என அழைக்கப்படும் புனித தொப்பியும் பணியின்
அடையாளமாகக் கையில் ஏந்தும் சிலுவை பொறித்த செங்கோலும் அகில உலக
கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் தலைவரான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கத்தோலிக்க
சமயத்தின் தலைமையிடமான வத்திக்கான் நகரில் இருந்து அனுப்பி வைத்து உள்ளார். ஆயர்
பணியின் அர்த்தத்தைக் குறிக்கும் புனித தொப்பி மற்றும் சிலுவை பொறித்த செங்கோல் மிகவும்
முக்கியமானதாகவும் புனிதமானதாகவும் கருதப்படுகிறது. ஆயராகப் பதவியேற்பவர்களுக்குப்
பிரத்யேகமாகத் திருத்தந்தை அவற்றைப் புனிதப்படுத்தி அனுப்பி வைப்பது வழக்கம். தலைமை
ஆயராகத் திருத்தந்தையின் வழிகாட்டுதலின் கீழ் உலகின் அனைத்து ஆயர்களும் பணியாற்ற
வேண்டும் என்பதை இது குறிக்கிறது. தன்னோடு இணைந்து பணி செய்ய சிறப்பு அதிகாரத்தைத்
திருத்தந்தை பிற ஆயர்களுக்கு வழங்குவதன் அடையாளமாகவும் புனித தொப்பி மற்றும்
சிலுவை பொறித்த செங்கோல் வழங்கப்படுகிறது. அதனடிப்படையில் வத்திக்கானில் இருந்து
அனுப்பப்பட்ட புனித தொப்பியும் சிலுவை செங்கோலும் குழித்துறை மறைமாவட்டத்திடம்
வழங்கப்பட்டு உள்ளது. திருநிலைப்படுத்தப்படும் சடங்கில் புதிய ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ்
அவர்களுக்கு புனித தொப்பி அணிவிக்கப்பட்டு அவரது கரங்களில் சிலுவை பொறித்த
செங்கோல் வழங்கப்படுகிறது.
மேலும் திருநிலைப்பாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வருகை தரும்
திருத்தந்தையின் இந்தியா மற்றும் நேபாள நாடுகளுக்கான அரசாங்கத் தூதர் பேராயர்
லியோபோல்டோ ஜிரெல்லி விமானம் மூலம் திருவனந்தபுரம் வருகிறார். அவரை விமான
நிலையத்தில் மதுரைப் பேராயரும் குழித்துறை மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகருமான
பேராயர் அந்தோனி பாப்புசாமி தலைமையில் ஆயர்கள், அருள்பணியாளர்கள் பொதுநிலையினர்
பிரதிநிதிகள் வரவேற்று விழா நடைபெறும் இடத்திற்கு அழைத்து வருகிறார்கள். அவருக்கு
நட்டாலத்தில் குழித்துறை மறைமாவட்டம் சார்பில் சிறப்பான வரவேற்பு வழங்கப்படுகிறது.
மேலும் விழாவில் கலந்துகொள்ள வரும் புதிய ஆயர் மற்றும் பேராயர்கள், ஆயர்கள், முக்கிய
பிரமுகர்களுக்கு வரவேற்பு வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளின்
வரவேற்பு நடனம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.
திருநிலைப்பாட்டு விழாவிற்கு பின் புதிய ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் தனது நன்றி
திருப்பலியை பிப்ரவரி 25 ம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணிக்கு குழித்துறை
மறைமாவட்ட தலைமை கோயிலான திரித்துவபுரம் மூவொரு இறைவன் பேராலயத்தில்
நிறைவேற்றுகிறார். அதில் மறைமாவட்ட அருள்பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினர்
கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். முன்னதாக பிப்ரவரி 24 ம் தேதி சனிக்கிழமை மாலை 4
மணிக்கு குருந்தன்கோடு அருகே அவரது சொந்த ஊரான மணவிளை ஆலயத்தில் திருப்பலி
நிறைவேற்றுகிறார். அங்கே அவருக்கு மணவிளை மற்றும் அருகில் உள்ள கிராம மக்கள் சார்பில்
சிறப்பான வரவேற்பு வழங்கப்படுகிறது. தொடர்ந்து பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 10 மணிக்கு
அழகியமண்டபம் ஆதா மையத்தில் புதிய ஆயர் தலைமையில் குழித்துறை மறைமாவட்டத்தில்
பணி செய்யும் அருள்பணியாளர்களின் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில்
புதிய ஆயர் தன் பணித்திட்டம் குறித்து உரை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி 27 ம் தேதி குழித்துறை மறைமாவட்டத்தின் அருட்பணியாளர்கள் பொதுக்குழு கூட்டம்
