சிவகங்கை மாவட்டத்தில், 2024ம் ஆண்டு புத்தகத்திருவிழா, ஜனவரி மாதம் 27ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 6ம் தேதி வரை, சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்புத்தகத்திருவிழாவில், நுாற்றுக்கும் மேற்பட்ட பதிப்பகத்தார்களின் பல்வேறு தலைப்புகளிலுமான லட்சக்கணக்கிலான புத்தகங்கள், நாள்தோறும் தலைசிறந்த பேச்சாளர்களின் சொற்பொழிவுகள், சிந்தனை பட்டிமன்றங்கள், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அத்துடன், குழந்தைகளுக்கான திரைப்பட அரங்கு, அறிவியல் கண்காட்சிகள், கல்லுாரி மாணவர்களுக்கு, வேலை வாய்ப்பினை வழங்கும் போட்டித்தேர்வுகளுக்கான நிகழ்ச்சிகள் போன்றவையும் இடம் பெற உள்ளன. சிவகங்கை மாவட்டம் முழுமையும் பயன் பெறும் வகையில், அனைத்து கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் இப்புத்தகத்திருவிழாவிற்கு வருகை தந்து, கலை நிகழ்ச்சிகளை கண்டு களிப்பதுடன், புத்தகங்களையும் வாங்கி, தங்களது வாசிப்பு திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும், நல்ல படைப்பாற்றல் கொண்ட எழுத்தாளர்கள், தாங்கள் எழுதிய புத்தகங்களை புத்தகத்திருவிழா நடைபெறும் நாட்களில் வெளியிடுவதற்கு ஏற்றவாறு, முன்னதாகவே, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிப்பிரிவில் ஒப்படைத்திடவும் அறிவுறுத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.