கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில், தமிழர்
திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து குடும்ப
அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு வழங்கும் பணி மாவட்டத்தின் அனைத்து
நியாயவிலைக்கடைகளில் நடைபெற்று வருகிறது. அதன்ஒரு பகுதியாக, நாகர்கோவில்
மறவன்குடியிருப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டுவரும்
தளவாய்புரம் நியாயவிலைக்கடையில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்,
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில்
நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு. பொங்கல் பரிசு தொகுப்புகளின் தரம் மற்றும்
பொருட்களின் இருப்பு குறித்து, அலுவலர்களிடம் கேட்டறிந்து தெரிவிக்கையில்:-
தமிழக முதலமைச்சர் 2024ம் ஆண்டு பொங்கல் திருநாளை தமிழ்நாடு
மக்கள் சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர்
மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை
இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள
121 கூட்டுறவு நிறுவனங்களின் கீழ் செயல்படும் 581 நியாய விலைக்கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள்
வாணிப கழகத்தின் கீழ் செயல்படும் 135 நியாய விலைக்கடைகள், இதர கூட்டுறவின் கீழ் செயல்படும்
46 நியாய விலைக்கடைகள், சுயஉதவிக்குழுக்களால் நடத்தப்படும் 3 நியாய விலைக்கடைகள் என
மொத்தம் 765 நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 5,74,857 அரிசி குடும்ப
அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும்
முழுக்கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கத்தொகை ரூ.1000 சேர்த்து பொங்கல் பரிசுத்தொகுப்பு
மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக்கடைகளின் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.
பொங்கல் பரிசுத்தொகுப்பு அனைத்து நியாய விலைக்கடைகளிலும் 10.1.2024 அன்று
முதல் 13.1.2024 வரையிலும் வழங்கப்படும். விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கும் 14.1.2024
அன்று வழங்கப்படும்.
மேலும், பொங்கல் பரிசு பொருட்களின் அளவு, தரம் மற்றும் பொருட்களின் கையிருப்பு
குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்ததோடு, ஓரிரு நாட்களில் அனைத்து குடும்ப
அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டதை அலுவலர்கள் உறுதி செய்திட
வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்,
தெரிவித்தார்.
ஆய்வில், நாகர்கோவில் மாநகராட்சி துணைமேயர் மேரி பிரின்ஸி லதா,
கூட்டுறவுத்துறை இணைபதிவாளர் சிவகாமி, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் விமலா ராணி, மண்டல தலைவர்கள், வார்டு உறுப்பினர், மக்கள் பிரதிநிதிகள்,
நியாயவிலைக்கடை அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.