கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், முன்னிலையில் போதைப்பொருள் தடுப்பு குறித்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
கன்னியாகுமரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போதைப்பொருள், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் போன்றவற்றை ஒழிப்பது தொடர்பாக கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட கலால் துறை, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட சுகாதாரத்துறை, மாவட்ட பள்ளிகல்வித்துறை, உயர்கல்வித்துறை, காவல் துறை, மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வாயிலாக அந்தந்த பகுதிகளில் உள்ள பெட்டிகடைகள், உணவகங்கள், மருந்தகங்கள், டாஸ்மாக் பார்கள், சந்தேகபடும்படியான இடங்களிலும் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெறும் தகவலின் அடிப்படையிலும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் மேற்குறிப்பிட்ட இடங்களில் விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை கண்டறியப்பட்டால் அவற்றை கைப்பற்றி, அழித்திடவும், விற்பனையாளர்களின் கடைகளை சீல் வைத்து உரியநடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மெத்தனால் உரிமம் வழங்கப்பட்ட இரண்டு நிறுவனங்களின் இருப்பு விவரத்தை தொடர்ந்து ஆய்வு செய்து கண்காணித்திடவும், அனுமதியின்றி மெத்தனால் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்யவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் வருவாய் கோட்டாட்சியர்கள், உணவு பாதுகாப்பு துறை உள்ளிட்டோர் அவர்களுடைய கோட்டத்திற்கு உட்பட்ட வட்டங்களில் போதை பொருள் விற்பனை நடைபெறுகிறதா என்பதை கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் மூலம் கண்காணித்து காவல்துறைக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது.
பொதுமக்கள் உங்கள் பகுதிகளில் போதைப்பொருட்கள் நடமாட்டம் குறித்து தெரியும்பட்சத்தில் கட்டணமில்லாத தொலைபேசி எண் 10581, காவல்துறை வாட்ஸப் எண் 8122930279 மற்றும் 7010363173 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தெரிவித்தார்.
ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகிதா, வருவாய் கோட்டாட்சியர்கள் காளீஸ்வரி (நாகர்கோவில்), தமிழரசி (பத்மநாபபுரம்), டாஸ்மாக் பொது மேலாளர் சங்கரலிங்கம், உதவி இயக்குநர்கள் சத்தியமூர்த்தி (பேரூராட்சிகள்), சாந்தி (ஊராட்சிகள்), உதவி ஆணையர் (ஆயம்) லொரைட்டா, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார், உசூர் மேலாளர் சுப்பிரமணியம், மதுவிலக்கு துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகர், மாநகர நகர்நல அலுவலர் ராம்குமார், வட்டாட்சியர்கள் மூர்த்தி (அகஸ்தீஸ்வரம்), கோலப்பன் (தோவாளை), முருகன் (கல்குளம்), புரந்தரதாஸ் (திருவட்டார்), ஜூலியன் ஹீவர் (விளவங்கோடு), ராஜசேகர் (கிள்ளியூர்), உதவி செயற்பொறியாளர் (மாசு கட்டுப்பாட்டு வாரியம்) பாரதி, துறை சார்ந்த அலுவலர்கள், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
கஞ்சா வழக்கில் 3 பேர்கள் கைது
தக்கலை மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் கனகராஜன் தலைமையிலான போலீசார் திங்கள்சந்தை அருகே வாடிவிளை பாம்பாட்டிகுளம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் பைக்கில் 1 கிலோ 50 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதை அடுத்து பைக்கில் வந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் கஞ்சாவையும், பைக்கையும் பறிமுதல் செய்த போலீசார் 3 பேரையும் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.