கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் பாதுகாப்பு மற்றும் காவல்துறை தொடர்புக்காக போலீஸ் அக்கா திட்டத்தை தொடங்கி வைத்திருந்தார். மாவட்ட ஆயுதப்படையில் வைத்து இந்த திட்டத்தில் நியமிக்கப்பட்ட பெண் காவலர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் கலந்துரையாடி பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
மாணவிகள் பாலியல் ரீதியான பிரச்சனைகள், குடும்ப வன்முறைகள், மற்ற பிரச்சினைகள் சம்பந்தமாக காவல் துறையை எளிதாக அணுகும் வண்ணம் போலீஸ் அக்காவின் தொலைபேசி எண் மாணவிகளுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்றும்,
மாணவிகளிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் ரகசியம் காக்கப்படுவதுடன், இது குறித்து உடனடியாக துரித விசாரணை மேற்கொண்டு அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும்,
போலீஸ் அக்காவிடம் மாணவிகள் எந்த தயக்கமும் இன்றி தகவல்களை தெரிவிக்கவும் காவல் துறைக்கும் மாணவிகளுக்கும் போலீஸ் அக்கா ஒரு பாலமாக இருந்து செயல்பட வேண்டும் என்றும், போலீஸ் அக்கா திட்டத்தில் நியமிக்கப்பட்ட பெண் காவலர்கள் நேரடியாக மாணவிகளுடன் கலந்துரையாடி சட்டத்தின் உரிமைகளை எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். இந்த நிகழ்வின் போது நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித்குமார், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மகேஷ் குமார், பார்த்திபன், நல்லசிவம், சந்திரசேகர், செந்தாமரைக்கண்ணன், ஜோசப் மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பெர்னார்ட் சேவியர் ஆகியோர் உடனிருந்தனர்.