தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். மேலும் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிடும் பொருட்டு, பல்வேறு வகையான முகாம்கள் நடத்தப்பட்டு அதன் வாயிலாக மனுக்கள் பெறப்பட்டு, தகுதியுடைய மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முதலமைச்சரின் புதிய திட்டமான “மக்களுடன் முதல்வர்” என்ற திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
அதன் முன்னோட்டமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நாளையதினம் (22.11.2023) மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடைபெற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அதன்படி சிவகங்கை மாவட்டத்தில், திருப்பத்தூர் வட்டம், திருப்பத்தூர் பேரூராட்சி பகுதியில் உள்ள சன்மீனா திருமண மண்டபத்தில், நாளையதினம் (22.11.2023), காலை 9 மணியளவில் “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய சிறப்பு முன்னோடி முகாம் தொடங்கி, மதியம் 2.30 மணி வரை நடைபெற உள்ளது. இதில், திருப்பத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டு, அந்தந்த துறைகள் தொடர்பான சேவைகள் குறித்த மனுக்களை உரிய ஆவணங்களுடன் வழங்கலாம்.
மேலும், இச்சிறப்பு முன்னோடி முகாமில், எரிசக்தித்துறையின் மூலம் புதிய மின் இணைப்பு, மின் வீதப்பட்டியல் மாற்றம், பெயர் மாற்றம், மின் பளுமாற்றம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலம் குடிநீர் / கழிவுநீர் இணைப்புகள், சொத்து வரி மதிப்பீடு, சொத்துவரி பெயர் மாற்றம், வர்த்தக உரிமங்கள், பிறப்பு மற்றும் இறப்பு சான்று, திடக்கழிவு மேலாண்மை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் பட்டா மாறுதல், உட்பிரிவு, நிலஅளவை விண்ணப்பங்கள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பட்டா வழங்குதல் வாரிசு, சாதி மற்றும் பிற சான்றுகள் ஓய்வுதிய திட்டங்கள், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மூலம் திட்ட ஒப்புதல், வகைப்பாடு மாற்றம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீட்டுமனைகள் கோரி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் / தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் உரிமை ஆவணம் வழங்கக் கோருதல்,
காவல்துறை மூலம் பொருளாதாரக் குற்றப்புகார், நில அபகரிப்பு / நில மோசடி, போக்சோ மற்றும் பிற மனுக்கள், மாற்றுதிறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை , தனிப்பட்ட மாற்றுதிறனாளிகள் அடையாள அட்டை , பராமரிப்பு மானியம், கருவிகள் / உபகரணங்கள், சுயவேலைவாய்ப்பு கடன் போன்ற, வங்கி கடன்கள் , சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் புதுமைப்பெண் திட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம், ஆதிதிராவிட மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா தாட்கோ கடன், பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் தமிழ்நாடு சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டுக்கழகம் – வாழ்வாதாரக் கடன்கள் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலம் புதியதொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் ,
பிரதம மந்திரியின் வேலைவாய்ப்புத்திட்டம் , வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்க நிதி உதவி வழங்கும் திட்டம், பிரதமமந்திரியின் மைக்ரோ உணவு பதப்படுத்தும் திட்டம் மற்றும் மாவட்ட தொழில் மைய கடன்கள் , ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் வாழ்வாதார கடன், பிறப்பு, இறப்பு பதிவுகள் மற்றும் பிற தனிப்பட்ட கோரிக்கைகள், மகளிர் சுய உதவிக்குழு கூட்டுறவு உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்புத்துறை / மகளிர் திட்டம் / மாவட்ட முன்னோடி வங்கி, சிவகங்கை மூலம் வாழ்வாதார கடன்கள் ஆகிய சேவைகளுக்கான மனுக்கள் பெறப்படும்.
எனவே, இந்த சிறப்பு முன்னோடி முகாமில், பொதுமக்கள் தங்கள் விண்ணப்பங்கள் தொடர்பாக, உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், தெரிவித்துள்ளார்.