மனநல அவசர சிகிச்சை மையம் திறப்பு

Share others

பொதுமக்கள் சாலையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை காணும் போது ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள மனநல அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தில் சேர்க்க முன் வரவேண்டும் – மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா வேண்டுகோள்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள மனநல அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தினை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா திறந்து வைத்து பேசுகையில்-
தேசிய நலவாழ்வு இயக்கம் மற்றும் கன்னியாகுமரி மாவட சுகாதாரத் துறை ஆகியவற்றின் ஆதரவுடன் தி பனியன் அமைப்பானது, பால்ம் மனநல அங்கமான மனோலயா ஆகியவற்றுடன் இணைந்து, 30 படுக்கைகள் கொண்ட புதிய மனநல அவசரசிகிட்சை மற்றும் மீட்பு மையம் திறக்கப்பட்டு உள்ளது.

மனநோய் என்பது குணப்படுத்தக்கூடிய நோயாகும். முதலில் குடும்பத்தில் உள்ளவர்கள் தான் தங்கள் பிள்ளைகள் மன அழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளார்களா எனவும் நடைமுறையில் மாற்றம் உள்ளதா என கண்டறிய வேண்டும். சின்ன குழந்தைகள் முதல் 90 வயது வரை உள்ள பெரியவர்கள் வரை மன அழுத்தத்திற்கு உள்ளாகி பாதிக்கப்படுகிறார்கள். ஒரு குடும்பத்தில் காய்ச்சல் உள்ளவர்களை நாம் எப்படி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வோமோ அதேப்போன்று குடும்பத்தில் ஒருவர் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் போது உடனடியாக மனநல மருத்துவரிடம் இரண்டு மூன்று முறை அழைத்து சென்று கவுன்சிலிங் கொடுத்தாலே பிரச்சனையை சரி செய்ய முடியும்.
எல்லா நோய்களையும் போன்று இதுவும் ஒரு நோய்தான். சாலையோரம் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் அவர்களுக்கே தெரியாமல் தவறாக பயன்படுத்தப்பட்டு, அதன் மூலம் கர்ப்பமாகி குழந்தைகள் பெறுகிறார்கள். அவர்களின் குழந்தைகளை அரசு மருத்துவர்கள் காப்பகங்களில் சேர்த்து விடுவார்கள். நீங்கள் இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். பொதுமக்கள் சாலையில் செல்லும்போது இந்த மாதிரியான நபர்களை காணும் போது அருகில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள அவசரசிகிட்சை மற்றும் மீட்பு மையத்தில் சேர்க்க முன்வர வேண்டும்.
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மனநல அவசரசிகிட்சை மற்றும் மீட்பு மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு மாதத்தில் வாகன விபத்துக்கள் மூலம் 20 முதல் 24 நபர்கள் வரை மரணம் அடைகிறார்கள். விபத்தின் மூலம் தலையில் அடிப்பட்டு, மன நோயாளியாக மாறுகின்றார்கள். இரண்டாவது காரணம் போதைப்பொருளுக்கு அடிமையாகி அதன் வாயிலாகவும் இந்த மாதிரியான பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். இதற்காக தான் தமிழ்நாடு முதலமைச்சர் போதை இல்லா தமிழ்நாடு என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களை போதை விழிப்புணர்வு குழுவினர் சந்தித்து அவர்களுக்கு தேவையான மனநல ஆலோசனைகள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.
மேலும் மனநலம் பாதிக்கப்பட்டு வீடற்ற நபர்களுக்கு மருத்துவமனை அடிப்படையிலான, பலதரப்பட்ட சேவைகளை வழங்குவதே அவசரசிகிட்சை மற்றும் மீட்பு மையத்தின் நோக்கமாகும். இந்த மையங்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுத்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளித்து, மீண்டும் தங்கள் குடும்பங்களில் சேர்ந்து, சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்க தேவையான உதவிகளையும் வழங்கும். இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா பேசினார்.
நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் சகாய ஸ்டிபன் ராஜ், துணை இயக்குநர் ரவிக்குமார் (குடும்ப நலம்), மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தினேஷ் சந்திரன், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரிபிரின்சி லதா, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் கிங்ஸ்லின், தி பனியன் துணைத்தலைவர் விஜயானந்த், (ஓய்வு), மாவட்ட மனநல மருத்துவர் பாஸ்கர், மனநலம் துறைதலைவர் புவனேஸ்வரன், மண்டல தலைவர் ஜவஹர், மாமன்ற உறுப்பினர் அருள்செல்வன், துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *