மாடத்தட்டுவிளையில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

Share others

கன்னியாகுமரி மாவட்டம், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் மாடத்தட்டுவிளை புனித லாரன்ஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாமினை குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் முன்னிலையில் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசுகையில்-
தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாமினை கடந்த 2.8.2025 துவக்கி வைத்தார். அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட அகஸ்தீஸ்வரம், ராஜக்கமங்கலம், குருந்தன்கோடு, கிள்ளியூர், முன்சிறை, மேல்புறம், திருவட்டார், தக்கலை மற்றும் தோவாளை உள்ளிட்ட 9 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தலா 3 முகாம்கள் என 27 முகாம்களும், நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 முகாம்கள் என 30 சிறப்பு முகாம்கள் சிறந்த மருத்துவர்களை கொண்டு நடத்தியதில் பல மருத்துவ பயனாளிகள் பயன்பெற்று உள்ளார்கள் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் நடைபெற்ற முகாமில் பொது மருத்துவம், பொது அறுவைச் சிகிச்சை, எலும்பியல் நரம்பியல், இதயவியல், நுரையீரல் மருத்துவம், சர்க்கரை நோய் மருத்துவம், தோல்நோய் மருத்துவம், குழந்தை மருத்துவம், மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம், மனநலம் மருத்துவம், வலி தணிப்பு மற்றும் மறுவாழ்வு சேவைகள், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் மருத்துவ சேவைகள் மற்றும் இயன் மருத்துவம் ஆகிய சிறப்பு பிரிவுகள் மூலம் சேவைகள் வழங்கப்பட்டன. மேலும், அனைவருக்கும் ரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை நோய் கண்டறியும் ரத்த பரிசோதனை, சிறுநீரக செயல்பாட்டு பரிசோதனைகள், பாப் ஸ்மியர் பரிசோதனை, மார்பக புற்றுநோய் பரிசோதனை, அல்ட்ராசவுண்ட், எக்ஸ்-ரே, இ.சி.ஜி மற்றும் எக்கோ ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
மேலும் முகாம்களில் சுகாதார சேவைகளுடன் இணைந்து முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கல் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல அட்டைகள் ஆகியவை ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்தப்பட்டன. இதுவரை நடைபெற்ற 30 முகாம்களில் சுமார் 67,000க்கும் மேற்பட்ட மருத்துவ பயனாளர்கள் இந்த முகாம்களில் கலந்துகொண்டு, பல்வேறு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதோடு, மேற்சிகிச்சை தேவைப்படும் மருத்துவ பயனாளிகளுக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த முகாமினை வெற்றிகரமாக சிறப்புடன் நடத்திய மாவட்ட சுகாதார அலுவலருடன் இணைந்து செயல்பட்ட வட்டார மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர், இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்), காசநோய் பிரிவு மருத்துவர்கள், தொழுநோய் பிரிவு மருத்துவர்கள், கண் மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள், மாநகராட்சி ஆணையர், பள்ளிக்கல்வித் துறை, வருவாய் துறை, காவல் துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத் துறை, ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் நலத் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், சமூக நலத்துறை, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் – திட்ட இயக்குநர், தொழிலாளர் நலத் துறை, உணவு பாதுகாப்புத் துறை, பொதுப்பணித் துறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கு எனது பாராட்டுக்களையும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா பேசினார்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் முன்னிலையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்.
நடைபெற்ற முகாமில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் லியோ டேவிட், மாவட்ட சுகாதார அலுவலர் அரவிந்த் ஜோதி, துணை இயக்குநர் குடும்ப நலப்பணிகள் ரவிக்குமார், குருந்தன்கோடு வட்டார மருத்துவ அலுவலர் பிரதீப் குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன், மருத்துவமில்லா பணியாளர் ஜெயகுமார், துணை இயக்குநர்கள் கிரிஜா (தொழுநோய்), முகம்மது சுபைர் அலிகான் (காசநோய்), முகாம் ஒருங்கிணைப்பாளர் பிரவீனா, மாடத்திட்டுவிளை புனித லாரன்ஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் அருட்பணி மரிய ராஜேந்திரன், வில்லுக்குறி பேரூராட்சி தலைவர் விஜயலெட்சுமி, வார்டு உறுப்பினர்கள், துறை அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *