மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா ஜனவரி மாதம் 12 ம் தேதி முதல் 21 ம் தேதி வரை நடக்கிறது. 22 ம் தேதி நன்றி திருப்பலி நடக்கிறது. விழாவின் முதல் நாள் காலையில் மாடத்தட்டுவிளை பங்கில் பணியாற்றி நினைவில் வாழும் அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள் மற்றும் பங்கிற்கு நிலம் தானம் கொடுத்தவர்கள் நினைவாக திருப்பலி நடந்தது. மாலையில் செபமாலை, புகழ்மாலையும் அதை தொடர்ந்து பாண்டிச்சேரி உயர் மறைமாவட்ட மேதகு பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் திருக்கொடியேற்றமும் திருப்பலியும் நடந்தது. இந்த திருக்கொடியேற்ற நிகழ்வில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
விழா நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலியும் மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, திருப்பலியும் இரவில் பொதுக்கூட்டமும் கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. 3 ம் நாள் விழாவில் காலை 6 மணி திருப்பலியில் திருமுழுக்கு வழங்கப்படுகிறது. இந்த திருப்பலி குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் பேரருட்பணி இயேசுரெத்தினம் தலைமையில் நடக்கிறது. மாலையில் நற்கருணை ஆசீர் நடக்கிறது. 8 ம் திருவிழாவில் காலை 11 மணிக்கு பகிர்வின் சமபந்தி விருந்து நடக்கிறது. 9 ம் திருவிழாவில் காலை 6 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. 11 மணிக்கு செயின்ட் செபஸ்தியான் நிதி லிமிடெட் கிளை அலுவலக புதிய கட்டிடம் திறப்பு விழா நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு செபமாலை சிறப்பு மாலை ஆராதனை நடக்கிறது. இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி, சிறப்பு தவில், வாணவேடிக்கை நடக்கிறது. 10 ம் திருவிழா காலை 5.30 மணிக்கு திருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலியும், 8.30 மணிக்கு திருவிழா திருப்பலியும் நடக்கிறது. மதியம் 2 மணிக்கு தேர்ப்பவனி, சிறப்பு தவில் நடக்கிறது. இரவு 8 மணிக்கு மாடத்தட்டுவிளை பங்கில் கண்தானம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கு பாராட்டு வழங்குதல் மற்றும் திருவிழா நன்கொடையாளர்கள், சிறப்பு குழுக்களின் உறுப்பினர்களை கவுரவித்தல் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை பங்கு அருட்பணி பேரவை, பங்கு இறைமக்கள், அருட்சகோதரிகள், பங்குத்தந்தை அருட்பணி ஜெயக்குமார், இணை பங்குத்தந்தை அருட்பணி பிரிவின் தாஸ், பங்கு அருட்பணி பேரவை துணைத்தலைவர் எட்வின் சேவியர் செல்வன், செயலாளர் ராணி ஸ்டெல்லா, இணை செயலாளர் ஜோஸ் வால்டின், பொருளாளர் லூக்காஸ் ஆகியோர் இணைந்து செய்து உள்ளனர்.