சிவகங்கை மாவட்டத்தில், பேரறிஞர் அண்ணா பிறந்த நாளினை சிறப்பிக்கின்ற வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வருகின்ற 14.10.2023 அன்று காலை 6 மணியளவில் மாவட்ட அளவிலான அண்ணா மிதிவண்டி போட்டிகள் நடைபெறவுள்ளது.
அதில், 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ தூரமும், 13 வயதிற்குட்பட்ட மாணவியர்களுக்கு 10 கி.மீ தூரமும், 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ தூரமும், 15 வயதிற்குட்பட்ட மாணவியர்களுக்கு 15 கி.மீ தூரமும், 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ தூரமும், 17 வயதிற்குட்பட்ட மாணவியர்களுக்கு 15 கி.மீ தூரமும் என மிதிவண்டி போட்டிகள் மேற்கண்ட பிரிவுகளின் படி நடைபெறவுள்ளது.
மேற்கண்ட மிதிவண்டி போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் தங்களது சொந்த மிதிவண்டிகளை கொண்டு வருதல் வேண்டும். இந்தியாவில் தயாரான சாதாரண கைப்பிடிகளை கொண்ட மிதிவண்டிகள் மட்டுமே உபயோகப்படுத்தப்பட வேண்டும். கியர் சைக்கிள் மற்றும் ரேஸ் சைக்கிள் அனுமதிக்கப்படமாட்டாது.
மேலும் மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமையாசிரியர்/தலைமையாசிரியிடமிருந்து கண்டிப்பாக வயது சான்றிதழ் தனித்தனியாக பெற்று வருதல் வேண்டும். ஆதார் கார்டு / EMIS எண்ணுடன் பள்ளி அடையாள அட்டை கொண்டு வருதல் வேண்டும். இப்போட்டிகளில் வெற்றி பெறும் முதல் மூன்று இடம் பெறுபவர்களுக்கு, முதல்பரிசு ரூ.5000-மும், இரண்டாம் பரிசு ரூ.3000 மும், மூன்றாம் பரிசு ரூ.2000 மும் மற்றும் 4 முதல் 10 இடங்களை பெறுபவர்களுக்கு தலா ரூ.250 மும் பரிசுத்தொகை, காசோலையாக வழங்கப்படும்.
மேற்கண்ட போட்டியானது, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தொடங்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மைதானத்தின் சுற்றியுள்ள பகுதிகளின் வழியே சென்று, மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு முடியும் வண்ணம் துறை ரீதியாக திட்டமிடப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட போட்டியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள் வருகின்ற 14.10.2023 அன்று காலை 6. மணிக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு வருகை தரவேண்டும் என மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், தெரிவித்துள்ளார்.