மினி மாரத்தான் விழிப்புணர்வு போட்டி

Share others

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில், மதுவிலக்கு மற்றும் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சியாளர்
ஆஷா அஜித், கொடியசைத்து துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம், பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி தெரிவிக்கையில்,

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க, மதுவிலக்கு மற்றும் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் சார்பில், மது அருந்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்துடன், போதை பொருள்களை தவறான பயன்பாட்டிற்கு பயன்படுத்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பள்ளி / கல்லுாரி மாணவ / மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பெருமளவில் கலந்துகொள்ளும், நெடுந்துார ஓட்டப்போட்டி சிறப்பாக நடைபெற்றது.

இப்போட்டியானது 6 கி.மீ தூரம் வரையில் நிர்ணயிக்கப்பட்டு நடத்தப்பட்டது. இப்போட்டியானது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டு, திருப்பத்தூர் சாலை வழியாக கோர்ட் வாசல் சென்று, அங்கிருந்து சிவகங்கை தாலுகா அலுவலக பாதை வழியாக பெருந்திட்ட வளாகத்தின் வெளிவட்டப்பாதையில் LIC வழியாக புதிய நீதிமன்றம் சென்று பின்பு அங்கிருந்து மகளிர் கல்லூரி மற்றும் திருப்பத்தூர் சாலை வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலக உள்வட்டப்பாதையில் மின்வாரிய அலுவலகம் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பிரதான கட்டிட வாசல் முன்பு நிறைவடைந்தது.

இப்போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்கள், குறிப்பாக முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், ஆகியோர் கலந்து கொண்டு, இப்போட்டிக்கு சிறப்பு சேர்த்துள்ளனர். மொத்தம் 500-க்கும் மேற்பட்டோர் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.

அதில், முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற 14-18 வயதிற்குட்பட்டவர்கள் பிரிவு மற்றும் 18-30 வயதிற்குட்பட்டவர்கள் பிரிவு ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கு, முதல் பரிசாக ரூ.10,000 மும், இரண்டாம் பரிசாக ரூ.7,000மும், மூன்றாம் பரிசாக ரூ.5,000மும் மற்றும் சிறப்பு பரிசாக முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,000 மும் பரிசுத்தொகை, பதக்கம் கேடயம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நோக்கில், அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும், இதுபோன்ற பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை அனைவரும் கருத்தில் கொண்டு, முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, உதவி ஆணையர் (கலால்) ரெங்கநாதன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன், துணை காவல் கண்காணிப்பாளர்கள் (சிவகங்கை மற்றும் காரைக்குடி), மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து, சிவகங்கை மற்றும் தேவகோட்டை ஆய அலுவலர்கள் பாலகிருஷ்ணன், கந்தசாமி, சிவகங்கை வட்டாட்சியர் சிவராமன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்கள், தன்னார்வலர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *