வளைகாப்பு நிகழ்ச்சி

Share others

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன்
திருப்பத்தூர் பேரூராட்சியில் சமுதாய வளைகாப்பு விழாவினை தொடங்கி வைத்து, கர்ப்பிணிப் பெண்களுக்கு தமிழக அரசின் வளைகாப்பு பொருட்கள் மற்றும்
தனது சார்பில் ஒவ்வொரு தாய்மார்களுக்கும் சேலை மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் தொகுப்பினை வழங்கி வாழ்த்தினார்.

 கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் , சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சியில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப்பணிகள் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவினை தொடங்கி வைத்து, கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு பொருட்கள் மற்றும் தனது சார்பில் ஒவ்வொரு தாய்மார்களுக்கும் சேலை மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் தொகுப்பினை  வழங்கி தெரிவிக்கையில்,

   தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்திடும் வகையில், சிறப்பான அரசாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்களுக்கு பொற்கால ஆட்சியினை வழங்கி வருகிறது. நாடு முன்னேற்றம் காண வேண்டுமென்றால், தனிநபரின் வருமானமும் முன்னேற்றம் அடைய வேண்டும். அதற்கு அடிப்படையான திட்டங்களை தொலைநோக்குப் பார்வையுடன் தமிழகத்தில் செயல்படுத்தி, தமிழகத்தை முன்னேற்றப் பாதையில்  தமிழ்நாடு முதலமைச்சர்   வழி நடத்தி வருகிறார்.






    அதில் குறிப்பாக, பெண்களின் வாழ்க்கைத்தர முன்னேற்றத்திற்கான எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி, ஆண்களுக்கு நிகராக பெண்கள் திகழும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தாயுள்ளம் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர்  கலைஞரின்  வழியில், கர்ப்பிணி தாய்மார்கள் மனநிறைவு அடையும் வகையில்  கலைஞரால் உருவாக்கப்பட்ட திட்டமான சமுதாய வளைகாப்பு திட்டத்தின் கீழ், கர்ப்பிணிப் பெண்களின் பெற்றோர்களின் ஸ்தானத்திலிருந்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துவதற்கென உத்தரவிட்டு, அதன்படி சமுதாய வளைகாப்பு விழா தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. 






     ஒருகாலத்தில் வசதி படைத்தவர்கள் மட்டுமே தங்கள் குடும்பத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துவார்கள். ஏழை வீட்டில் பிறந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு என்பது கனவாகவே இருந்து வந்தது. பொதுவாக, கர்ப்பிணிப் பெண்கள் குழந்தை பெற்றெடுத்து நலமுடன் வருவது என்பது மறுபிறவிக்கு சமமாகும். அத்தகைய நிலையில் உள்ள கர்ப்பிணிப் பெண்கள் மனநிறைவோடு சந்தோசமாக இருந்து குழந்தை பெற்று, தானும் குழந்தையும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டினை  ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணும்  அடைய வேண்டும் என்ற நோக்குடன், அரசே இந்த சமுதாய வளைகாப்பு விழாவை நடத்துகிறது.

அதன்மூலம் இங்கே ஏழை, பணக்காரர் என பாகுபாடு இன்றி ஒரே நிலையில் அனைத்து மதத்தை சார்ந்த கர்ப்பிணிப் தாய்மார்கள் அனைவருக்கும் இவ்விழாவின் மூலம் ஐந்து வகையான கலவை சாதம், வளையல்கள், பூ மற்றும் பழங்கள் உள்ளிட்ட வளைகாப்பு பொருட்கள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

    அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் 12 வட்டாரங்களிலுள்ள 43 தொகுதிகளில் மொத்தம் 6,481 கர்ப்பிணிப் பெண்கள் பதிவு செய்து பயன்பெற்று வருகின்றனர். அதில் ஒரு வட்டாரத்திற்கு 100 கர்ப்பிணிப் பெண்கள் வீதம் 12 வட்டாரங்களில் 1,200 கர்ப்பிணிப் பெண்களுக்கு, ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தலா ரூ.25,000 வீதம் மொத்தம் ரூ.3,00,000 செலவில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற உள்ளது. அதன் தொடக்க நிகழ்வாக இன்றையதினம், திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி வட்டாரத்திற்குட்பட்ட மொத்தம் 200 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படும் நிகழ்வு சிறப்பாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, அனைத்து வட்டாரங்களிலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா தொடர்ந்து நடைபெறும். 

     கர்ப்பிணி தாய்மார்கள், கர்ப்பகால மாதம் முதல் துவங்கி, 10 மாதமும் அரசு மருத்துவமனையில் பதிவு செய்து, சரியான மாதாந்திர பரிசோதனை மேற்கொண்டு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுப்பதுடன், தானும் ஆரோக்கியமாக இருந்திட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். அதன்படி, தனியார் மருத்துவமனைகளுக்கு மேல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உயர்தர சிகிச்சை வழங்கப்பட்டு, தற்போது கர்ப்பகால உயிரிழப்பு என்பது முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளது.

     மேலும், இவ்விழாவில் மருத்துவத்துறையை சார்ந்த அலுவலர்கள் கர்ப்பிணி தாய்மார்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் உண்ண வேண்டிய உணவு முறைகள், மன அழுத்தத்தை குறைக்கக்கூடிய யோகா பயிற்சி உள்ளிட்டவைகள் குறித்து இங்கு விரிவாக எடுத்துரைத்துள்ளனர். இங்கு எடுத்துரைக்கப்பட்டுள்ள கருத்துக்களை தாங்கள் முழுமையாக உள்வாங்கி இருப்பீர்கள். அதனை கவனமான முறையில் கடைப்பிடித்து, எதிர்கால தூண்களாக விளங்கவுள்ள எதிர்கால சந்ததியினர்களை இவ்வுலகிற்கு திடகாத்திரமானவர்களாக கொண்டு வருவதற்கு நீங்கள் மகிழ்ச்சியாகவும், மனநிறைவுடனும் இருந்திட வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் உங்களது குடும்பத்தில் ஒருவராக இருந்து, உங்களுக்கு இந்த சமுதாய வளைகாப்பு விழாவை நடத்தியுள்ளார்கள். 

    இதனை கருத்தில் கொண்டு தாங்கள் உரியகாலத்தில் முறையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு உடல் நலத்தினை பேணிக்காத்து, நல்லமுறையில் குழந்தைகளை பெற்றெடுத்து, தங்களது வாழ்க்கையில் அனைத்து நலன்களையும் பெற வேண்டும் என  கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் , 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து ஒவ்வொரு தாய்மார்களுக்கும் சேலை மற்றும் பாதாம் பருப்பு, ஹார்லிக்ஸ், பேரிச்சம்பழம் உள்ளிட்ட ஊட்டச்சத்து பொருட்கள் தொகுப்பினை வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி தலைவர்                       .மணிபாஸ்கரன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர்  கோகிலாராணி, திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சண்முகவடிவேல், திருப்பத்தூர் பேரூராட்சி துணைத்தலைவர் கான்முகமது, துணை இயக்குநர் (சுகாதாரம்) விஜய்சந்திரன், திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்)  முத்து மாரியப்பன், திருப்பத்தூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள்  ராஜேஸ்வரி சேகர், ஹரி சரண்யா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மற்றும் திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *