
கிள்ளியூர் சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-

நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் எவ்வித சிரமமுமின்றி தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்பதை உறுதிப்படுத்த, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 229, கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி 230, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி 231, குளச்சல் சட்டமன்ற தொகுதி, 232, பத்மனாபபுரம் சட்டமன்ற தொகுதி, 233, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி 234, கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்ஒருபகுதியாக கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மத்திக்கோடு வடக்கன்கரை அரசு தொடக்கப்பள்ளி, பூட்டேற்றி அரசு தொடக்கப்பள்ளி, கீழ்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, புதுக்கடை முக்காடு அரசு நடுநிலைப்பள்ளி, கொல்லன்கோடு வள்ளவிளை அரசு தொடக்கப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் 24 மணி நேர மின்சார வசதி, அதிக ஒளியூட்டும் மின்விளக்கு வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுத்தளம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஆண், பெண் இரு பாலருக்கு தனித்தனி கழிப்பறைகள் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டு உள்ளதா என அந்தந்த சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா கீழ்குளம் முதல்நிலை பேரூராட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியினை துவக்கி வைத்தார்.
நடைபெற்ற ஆய்வில் தலைமையாசிரியர்கள், அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா
