நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இஸ்ரோவின் தலைவர் மற்றும் விண்வெளித்துறை செயலாளர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள விஞ்ஞானி நாராயணனுக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.
நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது செய்திக்குறிப்பில் தெரிவிக்கையில்-
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோவின் தலைவர் மற்றும் விண்வெளித்துறை செயலாளர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விஞ்ஞானி நாராயணன் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ஆவார். காட்டுவிளை கிராமத்தை சேர்ந்த வன்னிய பெருமாள்- தங்கம்மாள் தம்பதியரின் மகனாக பிறந்தவர் நாராயணன். தந்தை தேங்காய் வியாபாரம் செய்து வந்தார். விஞ்ஞானி டாக்டர் நாராயணன் தனது பள்ளி படிப்பை கீழ காட்டுவிளை அரசு தொடக்கப் பள்ளியிலும், உயர்நிலை படிப்பினை ஆதிக்காட்டுவிளை ஊராட்சியில் உள்ள சியோன்புரம் சி.எஸ்.ஐ எல்எம்எஸ் பள்ளியிலும் படித்து முடித்தார்.
தொடர்ந்து நாகர்கோவில், கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் டிப்ளமோ படித்து முடித்த அவர், கரக்பூர் ஐஐடியில் கிரயோஜெனிக் இன்ஜினியரிங் பிரிவில் எம்.டெக் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்கில் பி.எச்டி முடித்து உள்ளார். 1984ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் உடன் இணைந்து பணியாற்றினார். ஏஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட் தயாரிப்பில் முக்கிய பொறுப்புகள் வகித்தவர். தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள எல்பிஎஸ்சி இயக்குநராக கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னையில் விஞ்ஞானி நாராயணனுக்கு பாராட்டு தெரிவித்து விருது வழங்கி கவுரவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து விஞ்ஞானி மாதவன் நாயர், விஞ்ஞானி சிவன் ஆகியோர் இஸ்ரோ தலைவராக பதவி வகித்திருந்தனர். மூன்றாவதாக தற்போது விஞ்ஞானி டாக்டர் நாராயணன் இஸ்ரோ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மட்டற்ற மகிழ்ச்சியடைவதோடு, வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். விஞ்ஞானி நாராயணன் இஸ்ரோ தலைவராக வருகின்ற 15.1.2025 அன்று பொறுப்பேற்க உள்ளார். இவரது பதவி காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். இரண்டு ஆண்டுகள் அல்லது மறு அறிவிப்பு வெளியாகும் வரை நாராயணன் இஸ்ரோ தலைவராக பதவி வகிப்பார்.
இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி 57, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1, ஜிஎஸ்எல்வி எம் கே 3, சந்திராயன் 2, 3 உள்ளிட்ட திட்டங்களில் விஞ்ஞானி நாராயணன் பணியாற்றி உள்ளார். ராக்கெட் மற்றும் விண்கல உந்துவிசை அமைப்புகளின் நிபுணராக நாராயணன் விளங்குகிறார். இஸ்ரோவின் உயரிய பொறுப்பான டிஸ்டிங்குவிஷ் சயின்ஸ்ட், கோரக்பூர் ஐஐடியின் வெள்ளி பதக்கம், இந்திய விண்வெளி மையத்தின் தங்க பதக்கம் போன்றவற்றையும் நாராயணன் பெற்று உள்ளார். இஸ்ரோ தலைவராக உள்ள சோம்நாத் பதவி காலம் அடுத்த வாரம் நிறைவு பெற உள்ள நிலையில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புகின்ற ககன்யான், வெள்ளிக்கோள் ஆய்வில் ஈடுபடும் சுக்ரயான் போன்ற திட்டங்கள் நாராயணன் மேற்பார்வையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளது. அவர்களுடைய பணி சிறக்க மனதார வாழ்த்துக்கிறேன்.
அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா இஸ்ரோவின் தலைவர் மற்றும் விண்வெளித்துறை செயலாளர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள விஞ்ஞானி டாக்டர் நாராயணன் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து, நினைவு பரிசு வழங்கினார்.