வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ஜாண் ஜோசப். இவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜோஸ்பின் வல்ஷா. இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மகன் ஆஷிக் (7) 2-ம் வகுப்பு படித்து வருகிறார். ஜாண்ஜோசப் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் ஜோஸ்பின் வல்சா பெருவிளையில் உள்ள அவரது தாயார் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இதனால் காலையும் மாலையும் மகனை பள்ளிக்கு அழைத்து வந்து கூட்டிச்செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று மாலையில் ஜோஸ்பின் வல்சா மகனை அழைக்க வந்தார். நேற்று மதியம் முதல் குமரி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. இந்த மழை வில்லுக்குறி பகுதியையும் விட்டு வைக்கவில்லை . வில்லுக்குறி பகுதியில் பெய்த கன மழையால் தேசிய நெடுஞ்சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி நின்றது. மாடத்தட்டுவிளையில் இருந்து வில்லுக்குறி வரும் சாலை ஓரம் உள்ள மழை நீர் ஓடை வழியாக மழை வெள்ளம் தேசிய நெடுஞ்சாலை அடிப்பகுதி வழியாக மறுபக்கம் பெருக்கெடுத்து ஓடியது. ஜோஸ்பின் வல்ஷாவும், ஆஷிக்கும் நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக ஆஷிக் மழைநீர் ஓடைக்குள் விழுந்து தண்ணீரில் அடித்துச் சென்றான். இதை சற்றும் எதிர்பார்க்காத ஜோஸ்பின் வல்ஷா ஓ என்று அலறி உள்ளார். இந்த அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் ஆஷிக் நெடுஞ்சாலைக்கு அடியில் உள்ள ஓடைக்குள் சிக்கி கொண்டான். உடனடியாக மாணவனை மீட்க ஓடையில் சிலர் இறங்கி தேடினார். மறுபக்கமும் இளைஞர்கள் சிலர் சென்று தேடினர். அங்கும் இங்குமாக மாணவை தேடி பார்த்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சுமார் 12 நிமிடங்களுக்குப் பிறகு ஆஷிக் நெடுஞ்சாலைக்கு அடியில் போடப்பட்டுள்ள மடையை தாண்டி மறுபக்கம் வழியாக வெளியே வந்தான். இதை பார்த்தவர் மெய் சிலிர்த்து அப்படியே உறைந்து விட்டனர். உடனடியாக மாணவனை மீட்ட இளைஞர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மாணவன் ஆஷிக் சேர்க்கப்பட்டான். அங்கு மாணவன் ஆஷிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் கூறும்போது; மாணவன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு வில்லுக்குறி பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கே காரணம் என குற்றம் சாட்டினர். தேசிய நெடுஞ்சாலைக்கு அடியில் போடப்பட்டுள்ள மழை நீர் ஓடை மடையில் மூன்றுக்கும் மேற்பட்ட குடிநீர் குழாய்கள் போடப்பட்டுள்ளன. இதனால் இந்த குழாய்களில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் சிக்கி மழைநீர் ஓடிச் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. குழந்தை ஆஷிக்கும் தேசிய நெடுஞ்சாலை அடியில் குடிநீர் குழாயில் சிக்கியதாலே சுமார் 12 நிமிடம் கழித்து வெளியே வந்தான். இதனால் தான் அவனுக்கு உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோன்று மழைநீர் ஓடையை பராமரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்று ஆவேசமாக கூறினார்கள். இது குறித்து வில்லுக்குறி வட்டார தொழில் வியாபாரிகள் சங்கத் தலைவர் முருகன், செயலாளர் முருகன், பொருளாளர் மார்டின் ஆகியோர் கூட்டாக தெரிவிக்கையில் பள்ளி மாணவன் மழைநீர் ஓடை மடையில் சிக்கிய சம்பவத்தை முன்னிறுத்தி கண்டன போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தனர். நிர்வாகத்தை கண்டித்து நாளை பேரூராட்சி நிர்வாகம் முன்பு கண்டன போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர். பள்ளி மாணவன் மழை நீர் ஓடையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.