வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ஜாண் ஜோசப். இவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜோஸ்பின் வல்ஷா. இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மகன் ஆஷிக் (7) 2-ம் வகுப்பு படித்து வருகிறார். ஜாண்ஜோசப் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் ஜோஸ்பின் வல்சா பெருவிளையில் உள்ள அவரது தாயார் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இதனால் காலையும் மாலையும் மகனை பள்ளிக்கு அழைத்து வந்து கூட்டிச்செல்வது வழக்கம்.
மாடத்தட்டுவிளையில் இருந்து வில்லுக்குறி வரும் சாலை ஓரம் உள்ள மழை நீர் ஓடை வழியாக மழை வெள்ளம் தேசிய நெடுஞ்சாலை அடிப்பகுதி வழியாக மறுபக்கம் பெருக்கெடுத்து ஓடியது. ஜோஸ்பின் வல்ஷாவும், ஆஷிக்கும் நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக ஆஷிக் மழைநீர் ஓடைக்குள் விழுந்து தண்ணீரில் அடித்துச் சென்றான். இதை சற்றும் எதிர்பார்க்காத ஜோஸ்பின் வல்ஷா ஓ என்று அலறி உள்ளார். இந்த அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ளவர்கள் ஓடி வந்து மாணவனை மீட்க ஓடையில் சிலர் இறங்கி தேடினார். மறுபக்கமும் இளைஞர்கள் சிலர் சென்று தேடினர். அங்கும் இங்குமாக மாணவை தேடி பார்த்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சுமார் 12 நிமிடங்களுக்குப் பிறகு ஆஷிக் நெடுஞ்சாலைக்கு அடியில் போடப்பட்டுள்ள மடையை தாண்டி மறுபக்கம் வழியாக வெளியே வந்தான். இதை பார்த்தவர் மெய் சிலிர்த்து அப்படியே உறைந்து விட்டனர். உடனடியாக மாணவனை மீட்ட இளைஞர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மாணவன் ஆஷிக் சேர்க்கப்பட்டான். அங்கு மாணவன் ஆஷிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வில்லுக்குறி பேரூராட்சி தலைவர் விஜயலெட்சுமி தலைமையில் செயல் அலுவலர் கொண்ட குழுவினர் ஓடையை சரி செய்ய சம்பவ இடத்திற்கு நேற்று காலையில் வந்து பணிகளை செய்தனர். மழை நீர் ஓடையில் அடித்து செல்லப்பட்ட மாணவனுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள், வியாபாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அப்போது சம்பவ இடம் வந்த பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கௌசிக் பொதுமக்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். ஒவ்வொரு இடமாக சென்று பார்வையிட்டார். அதன் பிறகு பொதுமக்களிடம் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மாலையில் குளச்சல் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பிரின்ஸ் நேரில் வந்து பார்வையிட்டார். அப்போதும் பொதுமக்கள் மாணவனுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினார்கள். சிபிஐ எம்எல் விடுதலை கட்சி சார்பில் 19 ம் தேதி மாலையில் வில்லுக்குறி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவனுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப் போவதாக மாவட்ட செயலாளர் அந்தோணி முத்து தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.