சிவகங்கை மாவட்டம், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பாக, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு,விழிப்புணர்வு மாரத்தான் போட்டி மற்றும் விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் கொடியசைத்து துவக்கி வைத்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் முன்னிலையில் வழங்கி தெரிவிக்கையில்,
தமிழக விளைாயட்டு வரலாற்றில் 2024-ஆம் ஆண்டின் முதல் சிறப்புமிக்க விளையாட்டு நிகழ்வாக, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தமிழகத்தில், 19.1.2024 முதல் 30.1.2024 வரை சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகளில் 36 மாநிலங்களில் இருந்து சுமார் 5500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளார்கள்.
இவ்விளையாட்டு போட்டி தொடர்பாக, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு மேற்கண்ட 4 மாவட்டங்களை சுற்றி உள்ள மாவட்டங்களில் கேண்டர் விழிப்புணர்வு வாகனங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஒவ்வொரு மாவட்டங்களிலும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், இன்றைய தினம் மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட கேண்டர் விழிப்புணர்வு வாகனமானது சிவகங்கை மாவட்டத்திற்கு வருகைபுரிந்து சிறப்பித்து உள்ளது. அவ்வாகனத்திற்கு சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட அரண்மனை வாசல் பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேற்கண்ட விழிப்புணர்வு வாகனத்தின் வாயிலாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதுதவிர, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு அதன் ஒரு பகுதியாக, இன்றைய தினம் காலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்கள், பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு மாரத்தான் போட்டியும் தொடங்கி வைக்கப்பட்டு, அப்போட்டியானது நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மாவட்ட விளையாட்டு அரங்கில் நிறைவுற்றது.
மேலும், மேற்கண்ட மாரத்தான் போட்டிகள் மற்றும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் – 2023 தொடர்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களிடையே நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, வினாடி வினா போட்டி ஆகியவைகளில் வெற்றிப் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டு உள்ளது.
தேசிய அளவிலான நடைபெற உள்ள கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள்–2023ற்கு சிறப்பு சேர்க்கின்ற வகையில் , வீரமங்கை வேலுநாச்சியார் உருவம் பொருந்திய ஐகான் தமிழக அரசால் நிறுவப்பட்டு உள்ளது. கடந்த காலங்களில் மேற்கண்ட போட்டியானது நடைபெறும் பொழுது நமது மாநிலத்தை சார்ந்தோர் கலந்து கொண்டு தமிழகத்திற்கு சிறப்பு சேர்த்தனர். தற்போது, நமது மாநிலத்தில் தேசிய அளவிலான போட்டி நடைபெறுவது சிறப்புக்குறியதாகும். நமது மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஊக்கம் அளிக்கின்ற வகையில் இவை அமைந்து உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, நமது மாவட்டத்தை சார்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள், சிறந்த பங்களிப்பினை அளித்து வெற்றி காணவேண்டும் . தேசிய அளவிலான இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் நமது மாவட்டத்தை சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு நமது மாவட்டத்தில் பரிசளிப்பு விழாவும் நடத்தப்படும். எனவே, தங்களுக்கான விளையாட்டு போட்டியில் சிறந்த பயிற்சிப் பெற்று, சிறந்து விளங்கி வெற்றி காண எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
நிகழ்ச்சிகளில், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, சிவகங்கை நகர்மன்றத் தலைவர் துரை ஆனந்த், சிவகங்கை துணை காவல் கண்காணிப்பாளர் சிபி சாய் சௌந்தர்யன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் பாலுமுத்து, மௌண்ட் லிட்ரா மேல்நிலைப்பள்ளி தாளாளர் பால.கார்த்திகேயன், சிலம்பாட்டம் பயிற்சியாளர் பரமசிவம் மற்றும் பள்ளி , கல்லூரி மாணவ மாணவியர்கள் , ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.