19.12.2023 அன்று மாலை சுமார் 6.30 மணியளவில் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு கிள்ளியூர் பகுதியை சேர்ந்த 11 மாத ஆண் குழந்தை கொண்டுவரப்பட்டது. குழந்தை கடந்த சில நாட்களாகவே அதிகப்படியான நெஞ்சு சளியால் அவதிப்பட்டு வந்தது. மேலும் அன்று மாலை 4.30 மணியளவில் தவறுதலாக பட்டன் பேட்டரி என்று சொல்லக்கூடிய பெரிய அளவிலான லித்தியம் பேட்டரியை விழுங்கி விட்டதாகவும் குழந்தையின் பெற்றோர் கூறினர். பொதுவாகவே தொண்டையில் அல்லது உணவுக் குழாயில் சிக்கிக் கொண்ட லித்தியம் பேட்டரிகள் மிகவும் ஆபத்தானவை. அவற்றில் இருந்து வெளியாகும் வேதிப்பொருட்கள் திசுக்களை அழிக்கும் தன்மை கொண்டது. சரியான நேரத்தில் உடனடியாக அகற்றப்படாவிட்டால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடியவை ஆகும். குழந்தையை பரிசோதித்ததில் பேட்டரி தொண்டைக்கு சற்று கீழே சிக்கி இருந்தது தெரிய வந்தது. எனவே உடனடியாக மயக்க மருந்து கொடுத்து தொண்டையில் சிக்கியிருந்த பேட்டரியை அகற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டது. நெஞ்சில் சளி அதிகமாக இருந்ததால் முழு மயக்கம் கொடுப்பதும் ஒரு சவாலான விஷயமாகவே இருந்தது. காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை பிரிவின் துறைத் தலைவர் மரு.சைரஸ், மயக்கவியல் துறை தலைவர் மரு. எட்வர்ட் ஜான்சன் ஆகியோர் தலைமையில் காது மூக்கு தொண்டை நிபுணர் மரு. மதன் ராஜ் மற்றும் மயக்கவியல் நிபுணர் மரு. பிலிட்சென் அடங்கிய சிறப்பு மருத்துவ குழுவின் அயராத முயற்சியால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து தொண்டையில் சிக்கியிருந்த பேட்டரி உணவுக் குழல் உள்நோக்கி மூலம் உடனடியாக அகற்றப்பட்டது. மயக்கம் தெளிந்த குழந்தை, குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிக்கப்படுகிறது. குழந்தைக்கு தக்க நேரத்தில் சவாலான சிகிச்சை அளித்து காப்பாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் முதல்வர் மரு. பிரின்ஸ் பயஸ் பாராட்டினார்.