சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தெரிவித்ததாவது,
தமிழகத்தில் பருவமழை, புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, துரிதமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி, தற்சமயம் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், அதனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, அனைத்து மாவட்டங்களிலும் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, பள்ளிக்கல்வித்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை உள்ளாட்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியத்துறை, வனத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகளும் ஒருங்கிணைந்து முனைப்புடன் செயல்பட வேண்டும்.
சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக, கடந்த காலங்களில் பருவமழையின் மூலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும், மாவட்டத்தில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 84 பகுதிகளை, கண்காணிப்பதற்கென நியமிக்கப்பட்டுள்ள குழு அலுவலர்கள் மற்றும் வட்ட அளவிலான கண்காணிப்பு குழு அலுவலர்களை தொடர்ந்து கண்காணித்து, கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும், மேலும், பேரிடர் காலங்களில் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்திட, மாவட்டம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 81 நிவாரண மையங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதை உறுதிசெய்திட வேண்டும்.
சிவகங்கை மாவட்டத்தில் 2158 தன்னார்வலர்கள் முதல் நிலை மீட்ப்பாளர்களாக கண்டறியப்பட்டு, பேரிடர் காலங்களில் மக்களுக்கு தானாக முன் வந்து உதவும் வண்ணம் பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர். மேலும், பேரிடர் காலங்களில் அரசுடன் இணைந்து மீட்புப் பணியாற்றும் வகையில் 300 தன்னார்வலர்களுக்கும் ஆப்தமித்ரா பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுபணித்துறை, நெடுஞ்சாலைதுறை (தேசிய/மாநில) மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள், நீர் நிலைப் புறம்போக்கு மற்றும் நீர் செல்லும் வாய்க்கால் அல்லது ஆறுகளில் உள்ள ஆக்கிரமிப்புக்களை பொதுப்பணித்துறையினரும் மற்றும் வருவாய்த் துறையினரும் பாலங்கள், சிறுபாலங்கள் மற்றும் வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதை உறுதி செய்திடவும், பாலங்கள் மற்றும் சிறுபாலங்களில் உள்ள அடைப்புகளை அகற்றி நீர் வழிந்தோடுவதற்கு ஏதுவாக தூர்வாரப்பட்டு, நீர்வரத்தினால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் தேவையான மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளதை உறுதிசெய்திட வேண்டும். மேலும், மழைக்காலங்களில் பெறப்படும் நீரினை வீணாக்காமல் முறையாக சேமித்திடவும், உள்ளாட்சித்துறையின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீரினை குளோரினேற்றம் செய்யப்பட்டு வழங்குவதற்கான நடவடிக்கைகளை துறை சார்ந்த அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், பேரிடர் காலங்களில் பொது மக்களை பாதுகாக்கின்ற வகையில், மாநில பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற குழுவினர், கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படின் அதற்கு தேவையான மருந்து பொருட்கள் மற்றும் உணவுப்பொருள்கள், பொதுமக்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள், அத்தியாவசியப் பொருட்களான அரிசி, மண்ணெண்ணெய், காலி சாக்கு பைகள் ஆகியவைகளை தயார் நிலையில் வைத்திட வேண்டும்.
பாதிப்புகள் ஏற்படக்கூடிய நீர்நிலைகளில் வசிக்கின்ற பொதுமக்கள் கவனமுடன், முன் எச்சரிக்கையுடன் இருக்கவும், குறிப்பாக எதிர்பாரத விதமாக சாலைகளில் விழும் மரங்களை அகற்றிட மர அறுவை இயந்திரம், ஜே.சி.பி போன்ற இயந்திரங்கள், மின் கம்பங்கள் உள்ளிட்ட தேவையான அனைத்து உபகரzங்களை துறை சார்ந்த அலுவலர்கள் தயார் நிலையில் வைத்திட வேண்டும்.
மேலும், மழை, வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் தொடர்பான தங்களது புகார்களை 1077 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணிலும், 04575 – 246233 என்ற தொலைபேசி எண்ணிலும் தெரிவிப்பதற்கு பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தி, மேற்கண்ட அனைத்து செயல்முறைகளையும் கருத்தில் கொண்டு, அனைத்து துறை அரசு அலுவலர்களும் தங்களுக்கான பணியினை ஒருங்கிணைந்து சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்த்துறை, பொதுப்பணித்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சுகாதாரத்துறை, பள்ளிக் கல்வித்துறை, நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் பேரூராட்சி, ஊராட்சி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.