கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், எஸ்.எஸ்.கோட்டை உள்வட்டம், அரளிக்கோட்டை கிராமத்தில், மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை, வழங்கி தெரிவிக்கையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தீட்டி, அதற்கு செயல்வடிவம் அளிக்கின்ற வகையில் அனைத்துத்தரப்பு மக்களையும் பயன்பெறச் செய்து, ஒரு சிறப்பான நிர்வாகத்தை தமிழகத்தில் ஏற்படுத்தி உள்ளார்.
மேலும், பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில், அரசின் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கிடும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தினை தேர்ந்தெடுத்து, அதிலுள்ள கடைக்கோடி கிராமத்திற்கு சென்று, பொதுமக்களின் கோரிக்கைகளைப் பெற்று, தகுதியுடைய பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கென ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு முகாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், இன்றையதினம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரளிக்கோட்டை கிராமத்தினை தேர்ந்தெடுத்து, மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு உள்ளதற்காக மாவட்ட நிர்வாகத்திற்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த மக்கள் தொடர்பு முகாமினை முன்னிட்டு, பொதுமக்களின் தேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பாக 159 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அதில் தகுதியுடைய 125 மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மீதமுள்ள மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.
மேலும், இவ்வூராட்சியை பொறுத்த வரையில், இப்பகுதியில் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிவருவது மட்டுமன்றி, அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதில், குறிப்பாக தற்போது சாலை வசதி மேம்பாட்டிற்கென எஸ்.வி.மங்கலம், பிரான்மலை முதல் இன்றூதிப்பட்டி வரை 1.10 கி.மீ சாலை அமைப்பதற்கென ரூ.70.34 லட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் வேங்கைப்பட்டி முதல் ஐநூத்துப்பட்டி வரை 1.70 கி.மீ சாலை அமைப்பதற்கென ரூ.83.49 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.153.89 லட்சம் மதிப்பீட்டிலான சாலை வசதிகளும் மற்றும் பிரதம மந்திரி சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் எருமலைப்பட்டி, தும்பைப்பட்டி முதல் மனவாக்கிப்பட்டி வழியாக உலகநாதபுரம் வரை சாலை அமைப்பதற்கெனவும் ரூ.315.06 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற உள்ளது. இதுதவிர, சட்டமன்ற உறுப்பினராகிய எனது பங்கினை அளித்திடும் பொருட்டும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது குறிப்பிடதக்கதாகும்.
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழக அரசில் எல்லோருக்கும் எல்லாமும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் அனைவருக்குமான அரசாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக மக்களை தேடி அரசு என்ற உன்னதநிலை தற்போது தமிழகத்தில் ஏற்பட்டு உள்ளது.
அதனடிப்படையில் இன்றைய தினம் அனைத்து துறை அரசு முதல் நிலை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும், இம்மக்கள் தொடர்பு முகாமின் மூலம் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து, துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் விரிவாக மக்களுக்கு எடுத்துரைத்து உள்ளனர். இதனை பொதுமக்கள் கருத்தில் கொண்டு, அத்துறையைச் சார்ந்த அலுவலர்களை முறையாக அணுகி, அதன் மூலம் பயன்பெற்று,
தங்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், வருவாய் துறையின் சார்பில் 598 பயனாளிகளுக்கு ரூ.59,80,000 மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப்பட்டா, ஆதிதிராவிடர் நலப்பட்டா, வீட்டுமனை ஒப்படை ஆகியவைகளுக்கான ஆணைகளையும், சுகாதாரத்துறையின் சார்பில் 10 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ.20,000 மதிப்பீட்டிலான ஊட்டச்சத்து பெட்டகங்களையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 21 பயனாளிகளுக்கு ரூ.4,200 மதிப்பீட்டிலான பழக்கன்றுகள் தொகுப்புகளையும் , மகளிர் திட்டத்தின் சார்பில் 84 பயனாளிகளுக்கு ரூ.1,83,15,000 மதிப்பீட்டிலான பல்வேறு கடனுதவிகளும், வேளாண்மைத்துறையின் சார்பில் 313 பயனாளிகளுக்கு ரூ.92,400 மதிப்பீட்டிலான வேளாண் இடுபொருட்கள் மற்றும் தென்னங்கன்றுகளையும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் 9 பயனாளிகளுக்கு ரூ.1,01,500 மதிப்பீட்டிலான பல்வேறு வகையான உதவி தொகை மற்றும் இயற்கை மரண நிவாரணத்தொகையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 13 பயனாளிகளுக்கு ரூ.70,000 மதிப்பீட்டிலான சலவை பெட்டிகள் மற்றும் தையல் இயந்திரங்களும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.45,91,000 மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு மற்றும் தென்னை பராமரிப்பு, மகளிர் சுயஉதவிக்குழு கடனுதவிகளும், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.1,000 மதிப்பீட்டிலான தாது உப்பு கலவைகளும், தாட்கோ சார்பில் 03 பயனாளிகளுக்கு ரூ.20,08,698 மதிப்பீட்டிலான திட்ட மானியத்திற்கான ஆணைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 21 பயனாளிகளுக்கு ரூ.1,11,240 மதிப்பீட்டிலான பல்வேறு வகையான உதவி உபகரணங்களையும், வட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 15 பயனாளிகளுக்கு மின்னனு குடும்ப அட்டை என ஆக மொத்தம் 1,112 பயனாளிகளுக்கு ரூ.3,12,95,038 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கி, பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த செயல் விளக்க கண்காட்சியினை பார்வையிட்டார்.
முன்னதாக, அரளிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டம் 2022-2023ன் கீழ் ரூ.28.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் உபரி நிதி திட்டம் 2020-2021ன் கீழ் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளவு கொண்ட கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியினையும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மதிவாணன், அரளிக்கோட்டை ஊராட்சி மன்றத்தலைவர் புவனேஷ்வரி, சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி மற்றும் அனைத்து துறை அரசு முதல்நிலை அலுவலர்கள், பொதுமக்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.