சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், சிலுக்கப்பட்டி உள்வட்டம், மாரந்தை கிராமத்தில், நடந்த மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை, சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் முன்னிலையில் வழங்கி தெரிவிக்கையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தீட்டி, அதற்கு செயல்வடிவம் அளிக்கின்ற வகையில் அனைத்துத்தரப்பு மக்களையும் பயன்பெறச் செய்து, ஒரு சிறப்பான நிர்வாகத்தை தமிழகத்தில் ஏற்படுத்தி உள்ளார்.
மேலும், பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில், அரசின் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கிடும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தினை தேர்ந்தெடுத்து, அதிலுள்ள கடைக்கோடி கிராமத்திற்கு சென்று, பொதுமக்களின் கோரிக்கைகளைப் பெற்று, தகுதியுடைய பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கென ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு முகாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், இன்றையதினம் மாரந்தை கிராமத்தில் நடைபெற்று கொண்டிருக்கும், மக்கள் தொடர்பு முகாமின் மூலம் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து, துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் விரிவாக மக்களுக்கு எடுத்துரைத்துள்ளனர்.
இந்த மக்கள் தொடர்பு முகாமினை முன்னிட்டு, பொதுமக்களின் தேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பாக 129 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அதில் தகுதியுடைய 88 மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்குரிய நலத்திட்ட உதவிகளும், அதன் பயன்களும் முகாமின் வாயிலாக வழங்கப்பட உள்ளன.
மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு துறைகள் ரீதியாக செயல்விளக்க கண்காட்சி அரங்கமும் அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும், இன்றைய நவீன காலகட்டத்தில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும். அதில், குறிப்பாக அரசின் அனைத்து திட்டங்களின் கீழ் பயன்பெறுவதற்கு ஏதுவாக, அதற்குரிய இணையதளம் குறித்து முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அதில் தங்களுக்கு பயனுள்ள வகையிலான திட்டங்களின் கீழ் விண்ணப்பிக்கலாம். மேலும், அவ்விண்ணப்பங்கள் தொடர்பான நிலையினை இணையதளத்தின் வாயிலாகவே அறிந்து கொள்ளலாம்.
மேலும், தங்களது சுற்றுபுறத்தினை தூய்மையாக வைத்து சுகாதாரத்தினை பேணிக்காத்தல் வேண்டும். காய்ச்சல் பரவுவதை தடுத்திடும் பொருட்டு, தங்களது சுற்றுப்புறத்திலும் மற்றும் தங்களது இல்லத்தில் உபயோகிக்கப்படும் பொருட்களிலும் நன்நீர் தேங்காத வண்ணம் பாதுகாத்து, டெங்கு கொசு உருவாவதை தடுத்தல் வேண்டும். மேலும், காய்ச்சல் அறிகுறி தென்படுபவர்கள் அரசு மருத்துவமனையையோ அல்லது தங்களது பகுதியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவைகளை அணுகி முறையான சிகிச்சைப்பெற வேண்டும். குறிப்பாக தங்களது கிராமப்புறத்தினை சுகாதாரமான கிராமமாக உருவெடுத்திட அனைவரும் உறுதுணையாக இருந்திட வேண்டும்.
மேலும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு அழியா செல்வமான கல்வியினை வழங்கிட வேண்டும். குறிப்பாக அவர்கள் உயர் கல்வி கற்பதற்கும் உறுதுணையாக இருந்திட வேண்டும்.
மேலும், இவ்வூராட்சியை பொறுத்த வரையில், இப்பகுதியில் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிவருவது மட்டுமன்றி, அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது கிராம மக்கள் கோரிக்கைவைத்துள்ள பல்வேறு கூடுதல் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 38 பயனாளிகளுக்கு ரூ.6,22,900 மதிப்பீட்டிலான பல்வேறு உதவி தொகை பெறுவதற்கான ஆணைகளையும், காளையார்கோவில் சமத்துவபுர பயனாளிகள் 107 நபர்களுக்கு ரூ.35,70,000 மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்கான ஆணைகளையும், 15 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகளையும், தாட்கோ சார்பில் 01 பயனாளிக்கு ரூ.7,42,501 மதிப்பீட்டில் டூரிஸ்ட் வாகனத்திற்கென மானிய தொகைக்கான ஆணையினையும், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.41,17,000 மதிப்பீட்டிலான தனி நபர் கிணறு அமைத்தல், ஆட்டு மற்றும் மாட்டு கொட்டகை அமைத்தலுக்கான ஆணைகளையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.1,000 மதிப்பீட்டிலான பழக்கன்று தொகுப்புகளையும், வேளாண்மைத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.11,496 மதிப்பீட்டிலான பேட்டரி தெளிப்பான் மற்றும் ஜிங்சல்பேட் உரம் போன்ற இடுப்பொருட்களையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.18,000 மதிப்பீட்டிலான இலவச தையல் இயந்திரங்களையும், மறவமங்களம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.7,66,000 மதிப்பீட்டிலான பயிர் கடனுதவிகளையும், மகளிர் திட்டத்தின் சார்பில் 3 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மொத்தம் ரூ.4,00,000 மதிப்பீட்டிலான சமுதாய முதலீட்டு நிதி உதவிகளையும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் 1 பயனாளிக்கு கருணை அடிப்படையிலான பணி நியமண ஆணையினையும், கால்நடைத்துறையின் சார்பில் 15 பயனாளிகளுக்கு தாது உப்பு கலவைகளும், பொது சுகாதாரத்துறையின் சார்பில் 5 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ.10,000 மதிப்பீட்டிலான ஊட்டச்சத்து பெட்டகங்களையும் என ஆக மொத்தம் 218 பயனாளிகளுக்கு ரூ.1,02,58,897 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், மாவட்ட ஊரக முகமையின் திட்ட இயக்குநர் .சிவராமன், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ராஜேஸ்வரி, மாரந்தை ஊராட்சி மன்றத்தலைவர் திருவாசகம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆரோக்கிய சாந்தாராணி, காளையார்கோவில் வட்டாட்சியர் ராஜரத்தினம் மற்றும் அனைத்து துறை அரசு முதல்நிலை அலுவலர்கள், பொதுமக்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.