ஊக்கத்தொகை வழங்கல்

Share others

கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை சார்ந்த உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வினை, மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசி ரவிக்குமார் (மானாமதுரை), மாங்குடி (காரைக்குடி) ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்து தெரிவிக்கையில்,

தமிழ்நாடு முதலமைச்சர் விவசாய பெருங்குடி மக்களின் நலன் காக்கின்ற வகையில், எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதுமட்டுமன்றி, விவசாய பெருங்குடி மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும், அடிப்படையாக திகழ்ந்துவரும் கால்நடைகளின் நலன் காக்கின்ற வகையிலும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்கள் மற்றும் காப்பீட்டு திட்டம், பராமரிப்பு கடனுதவி போன்ற பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறார்.

மேலும், பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கெனவும், பொருளாதார ரீதியாக அவர்களுக்கு பயனுள்ள வகையிலும், அதற்கான சிறப்பு அறிவிப்புகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து வருகிறார். பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் பெறப்பட்டு, பொதுமக்களாகிய நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதில் ஒரு லிட்டருக்கு ரூபாய் 33 என்று உச்சகட்ட விலையை அரசால் நிர்ணயம் செய்யப்பட்டு, கூடுதலாக லாபம் கிடைப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் பால் உற்பத்தியாளர்களின் சிரமங்களை தவிர்ப்பதற்கும், குறிப்பாக பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய இருவருக்கும் எவ்வித பாதிப்பும் இன்றி, அவர்களுக்கான சமமான அரசாக தமிழக அரசு சிறப்பாக திகழ்ந்து வருகிறது. பால் உற்பத்தியை பெருக்குவதன் மூலம் கிராமப்புறங்களின் வருவாய் மேம்பாட்டு வளர்ச்சிக்கு அவை அடிப்படையாக அமைகிறது.

மேலும், பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, பால் உற்பத்தியாளர்களுக்கு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் சார்பில் ஆண்டு வருமான லாபத்தில் ஒரு லிட்டருக்கு ரூ.0.50 வீதம் உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிடவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக பண்டிகை காலங்களில் அவர்களுக்கு பயனுள்ளதாக இவை அமைகிறது.

சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் கடந்த 1.1.1983 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஒன்றியத்தின் கீழ் சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களை எல்லையாக கொண்டு உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது.

இவ்வொன்றியத்தின் மூலம் கடந்த ஆண்டு ஈட்டப்பட்ட லாபத்தில் இரு மாவட்டங்களை சார்ந்த மொத்தம் 547 கூட்டுறவு சங்கங்களை சார்ந்த 11,832 உறுப்பினர்களுக்கு லிட்டர் ஒன்றிற்கு ரூ.0.50 வீதம் ரூ.1,35,35,653.80 மதிப்பீட்டில் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு உள்ளது.

அதேபோன்று இவ்வாண்டிலும் வழங்கிடும் பொருட்டு சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 411 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களை சார்ந்த 8,936 உறுப்பினர்களுக்கு ரூ.1,06,07,911 மதிப்பீட்டிலான ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது. அதற்கான தொடக்க நிகழ்வு இன்றைய தினம் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

வருகின்ற தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடிடும் வகையில், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களை சார்ந்த உறுப்பினர்களுக்கு இவ்வூக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதேபோன்று அரசின் குறிப்பிட்ட துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் தீபாவளி பண்டிகைக்கான ஊக்கத்தொகையும் அரசின் சார்பில் வழங்கப்படுகிறது.

இதுபோன்று அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ள வகையிலான திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி, பிற மாநிலங்களுக்கு முன் மாதிரியான முதலமைச்சராகவும் முதன்மையான முதலமைச்சராகவும் தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்ந்து வருகிறார் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மஞ்சுளா பாலசந்தர், மானாமதுரை துணை பதிவாளர் (பால்வளம்) செல்வம், பொது மேலாளர் ஆவின் (காரைக்குடி) ராஜசேகர் காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், ஆரோக்கிய சாந்தாராணி மற்றும் பால்வளத்துறை, ஆவின் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *