உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024 தொடர்பாக, சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பெருந்திரள் கூட்டத்தில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று, சிவகங்கை மாவட்டத்தில் நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாற்றம் செய்து, தொழில் முனைவோர்களுக்கு தொழிற்கடனுதவிகளை, மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தலைமையில் வழங்கி தெரிவிக்கையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பொதுமக்களுக்கு அளித்த 505 வாக்குறுதிகளை நிறைவேற்றிடும் பொருட்டு, ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த இரண்டரை ஆண்டுகளில், 85 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார். இதுதவிர, புதிதாகவும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்தும், அதனை திறன்பட செயல்படுத்தியும், சொல்லாத வாக்குறுதிகளையும் தற்போது நிறைவேற்றி வருகிறார்.
மேலும், கல்வி, வேளாண்மை, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட அனைத்தையும் மேம்படுத்தி, அதற்கான செயல் திட்டங்களையும் வடிவமைத்து, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்ந்து வருகிறார். குறிப்பாக, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தொழில் தொடங்கிட வைத்து, தொழில் முனைவோர்களாக உருவாக்கிடும் பொருட்டு, எண்ணற்ற திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
அதனடிப்படையில், தொழில் வணிகத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்கி பயன்பெறும் வகையில் புதிய தொழில் முனைவர்களை கண்டறிந்து, அவர்களை ஆற்றல்மிக்க தொழில் முனைவர்களாக உருவாக்கிட வேண்டும் என்ற உயரிய நோக்கில், அவர்களுக்கு தொழில் மேம்பாட்டு பயிற்சி மற்றும் மானியத்துடன் கூடிய கடனுதவிகள் அளித்து, பல்வேறு திட்டங்களின் கீழும் பயன்பெற செய்து வருகிறார்.
இதுதவிர, தமிழக முதலமைச்சரின் லட்சிய கனவான வருகிற 2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டினை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான பொருளாதார ரீதியில் உயர்த்தும் விதமாக, உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 வருகிற ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது. அம்மாநாடு தொடர்பாக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான பெருந்திரள் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து, தமிழ்நாடு முதலமைச்சரின் லட்சிய கனவினை நோக்கி, இம்மாநாடு நடைபெறுகிறது. கடந்த 10.8.2023 அன்று சென்னையில் நடைபெற்ற இம்மாநாட்டின் முன்னோட்ட அறிமுக விழாவின் போது இதற்கான இலச்சினையையும் தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டார்.
தமிழ்நாடு அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, உயர் தொழிநுட்பம் சார்ந்த தொழில் முதலீடுகளை ஈர்த்திடுவது மட்டுமல்லாமல், பெருமளவில் வேலைவாய்ப்பு அளித்திடும் தொழில் முதலீடுகளையும் ஈர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்வதற்கும் அடிப்படையாக இம்மாநாடு அமைகிறது.
இவ்வுலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முன்னோடியாக அனைத்து மாவட்டங்களிலும் நடத்திட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிடப்பட்டு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தங்களது தொழில் மேம்பாட்டிற்கான முதலீடுகளை ஒருங்கிணைக்கும் வகையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலம் வழங்கப்பட்டுள்ள இலக்கீட்டினை எய்திடும் வகையிலான நோக்கத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவிலான பெருந்திரள் கூட்டம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில், உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க அந்தந்த மாவட்டங்களில் தொழில் முனைவோர்கள், தங்களது தொழில் முதலீடுகளில் மேலும் ஈடுபட வேண்டி, இம்மாதிரியான பெருந்திரள் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்திற்கு இலக்காக ரூ.300 கோடி நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை ரூ.305.00 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டு உள்ளன. இதன் வாயிலாக 3162 வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு இவை அடிப்படையாகவும் அமையும். அதன்படி இந்நிகழ்ச்சியின் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 31 நிறுவனங்களின் ரூ.305 கோடி மதிப்பீட்டிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில், தொழில் முனைவோர்கள் 6 நபர்களுக்கு ரூ.4.65 கோடி மதிப்பீட்டிலான தொழிற்கடனுதவிகளும் வழங்கப்பட்டு உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் ஆயத்த ஆடைகள் தயாரித்தல், தென்னை சார்ந்த பொருட்கள், உணவு பொருட்கள் உற்பத்தி, மண்பாண்டம் தொழில்கள், ஆத்தங்குடி டைல்ஸ் தயாரித்தல், செட்டிநாட்டு பலகாரங்கள் தயாரித்தல், நாட்டு/சாம்பல் செங்கல் தயாரித்தல் ஆகிய தொழில்களை முக்கிய தொழிலாக கொண்டுள்ளது.
மேலும் சிவகங்கை மாவட்டமானது அதிகப்படியான மனிதசக்தி, இடவசதியினை கொண்டுள்ளதால் புதியதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு மிகப் பயனுள்ளதாகவும் அமையும். மேலும், இம்மாநாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனங்களுக்கு அனைத்து விதமான அனுமதிகள் மற்றும் உரிமங்கள் ஆகியவற்றை அனைத்து துறைகளிடம் இருந்து உரிய காலத்தில் விரைவாக பெற்றிட ஒற்றைச்சாளர தகவு வழியாக பெற்றுத்தர மாவட்ட தொழில் மையம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
விண்வெளி, தகவல் தொழில் நுட்பம், செயற்கை நுண்ணறிவு ஆட்டோ மொபைல் மின்சார வாகனங்கள், தரவு பகுப்பாய்வு மற்றும் மேம்பட்ட பொருட்கள் உட்பட பல்வேறு துறைகள் அரசிடம் இருந்து சிறப்பு கவனம் மற்றும் ஆதரவைப் பெற்று முதலீட்டு வாய்ப்புகளை பெற்றிட உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 முக்கியதளமாக செயல்படும்.
எனவே புதிதாக தொழில் தொடங்க இருக்கும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர்கள் இம்மாவட்டத்தில் தங்களது முதலீடுகளை, முதலீடு செய்து, இம்மாவட்டத்தினை வளர்ச்சியடைந்த மாவட்டமாக உருவெடுப்பதற்கு அரசுடன் இணைந்து முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், சிவகங்கை நகர் மன்றத்துணைத்தலைவர் கார்கண்ணன், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் ரவி, சாந்தா சகாயராணி, உதவி பொறியாளர் (மாவட்ட தொழில் மையம்) காளிதாஸ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், தொழில் முதலீட்டாளர்கள், பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் இருந்து
செல்வநாதன்