சிவகங்கை மாவட்டம், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், ஒரு வார காலத்திற்கு கொண்டாடப்பட உள்ள ஆட்சிமொழிச் சட்ட வார விழாவின் முதல் நிகழ்வாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், விழிப்புணர்வு பேரணியினை, மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவிக்கையில்,
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956 ஆம் நாளினை நினைவுகூரும் வகையில் 2023-24ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் ஒரு வார காலத்திற்கு பல்வேறு நிகழ்வுகளுடன் சட்ட வார விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
அதில் முதல் நிகழ்வாக, அரசு அலுவலர்கள், பணியாளர்கள், தமிழ் அமைப்புகள், பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுடன் இணைந்து தமிழ் சார்ந்த கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் ஆட்சிமொழித் தொடர்பான பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வுப் பேரணி நடத்திடும் அடிப்படையில், பறையிசை, பொய்க்கால் குதிரை, கரகாட்டம், சிலம்பாட்டம், வாள்வீச்சு, உள்ளிட்ட நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் ஆகியவைகளுடன் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியானது, சிவகங்கை நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று சண்முகராஜா கலையரங்கம் அருகில் நிறைவு பெற்றது. இப்பேரணியில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்பேரணியில், வணிக நிறுவனங்களில் பெயர்ப்பலகைகளை தமிழில் வைக்க வலியுறுத்தி துண்டறிக்கைகள் வணிக நிறுவன உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டன.
இதனை தொடர்ந்து, பல்வேறு நிகழ்வுகள் துறை ரீதியாக ஒரு வார காலத்திற்கு மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, தமிழ் வளர்ச்சித்துறையால் ஒருவார காலத்திற்கு நடத்தப்பெறும், ஆட்சிமொழிச் சட்டவார விழாவின் அனைத்து நிகழ்வுகளிலும் பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள், அரசு அலுவலர்கள், அரசுப் பணியாளர்கள், தமிழறிஞர் பெருமக்கள், தமிழ் அமைப்பினர், பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று சிறப்பித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் நாகராசன், தமிழறிஞர்கள் தமிழ்ச்செம்மல் சந்திரன், தமிழ்க்கனல், காளிராசா, திருக்குறள் செல்வர் செயம்கொண்டான், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் கலைமகள் முத்துக்கிருஷ்ணன், ஞானபண்டிதன், சுகுமாறன் தமிழ்ச்செம்மல் பகீரதநாச்சியப்பன், தமிழ் அமைப்பினர், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.