தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளதைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற முகாமில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், தலைமையில், பங்கேற்று முகாமினை பார்வையிட்டு தெரிவிக்கையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த இரண்டரை ஆண்டுகளில் மக்கள் போற்றுகின்ற வகையில், பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அதில், முத்தாய்பான திட்டமான மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தின் முன்னோட்டமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 22.11.2023 அன்று மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.
முன்னதாக, பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிடும் பொருட்டு, மக்கள் தொடர்பு முகாம், முதல்வரின் முகவரி, மக்கள் குறைதீர்க்கம் நாள் கூட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்கள் போன்றவைகளை நடத்தி, அதன் வாயிலாக மனுக்கள் பெறப்பட்டு, தகுதியுடைய மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டு உள்ள புதிய திட்டமான மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் முகாம்களில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, எரிசக்தித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் என மொத்தம் 13 துறைகள் இதில் பங்கேற்றுள்ளன. இந்த துறைகள் ரீதியாக பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை முகாமின் வாயிலாக பதிவு செய்து, 30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில், இந்த முகாம்கள் நடத்தப்படுகிறது. இதில்,தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய பலன்கள் வழங்கப்படும்.
அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை நகராட்சி பகுதியில் 5 இடங்களிலும், (19.12.2023) காரைக்குடி நகராட்சி பகுதியில் 7 இடங்களிலும், 20.12.2023 அன்று மானாமதுரை நகராட்சி பகுதியில் 5 இடங்களிலும், 21.12.2023 அன்று தேவகோட்டை நகராட்சி பகுதியில் 5 இடங்களிலும் மற்றும் பேரூராட்சி பகுதிகளான இளையான்குடி பகுதியில் 22.12.2023 அன்றும், கண்டனூர் மற்றும் கோட்டையூர் பகுதியில் 26.12.2023 அன்றும் நாட்டரசன்கோட்டை பகுதியில் 28.12.2023 அன்றும் பள்ளத்தூர் மற்றும் புதுவயல் பகுதியில் 2.1.2024 அன்றும், சிங்கம்புணரி பகுதியில் 3.1.2024 அன்றும், கானாடுகாத்தான் மற்றும் நெற்குப்பை பகுதிகளில் 4.1.2024 அன்றும், திருப்புவனம் பகுதியில் 5.1.2024 அன்றும் என மேற்கண்ட பேரூராட்சி பகுதிகளில் தலா இரண்டு இடங்களில் முகாம்கள் நடைபெற திட்டமிடப்பட்டு,அதனடிப்படையில் இன்றையதினம் சிவகங்கை நகராட்சி பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இம்முகாம்கள் காலை 10.00 மணியளவில் தொடங்கப்பட்டு, மதியம் 3.மணிவரை மேற்கண்ட பகுதிகளில், மேற்குறிப்பிட்டு உள்ள நாட்களில் நடைபெற உள்ளது.
இதில், மேற்கண்ட துறைகள் தொடர்பான சேவைகளை பொதுமக்கள் பெறுவதற்கு ஏதுவாக, அனைத்து ஏற்பாடுகளும் சம்மந்தப்பட்ட துறைகள் ரீதியாக மேற்கொள்ளப்பட்டது. இதனை பொதுமக்கள் கருத்தில் கொண்டு, தங்களது பகுதிகளில் குறிப்பிட்ட நாட்களில் நடைபெறும் முகாம்களில், பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக உரிய ஆவணங்களுடன் மனுக்களை அளித்து, தங்களது கோரிக்கைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு பயன்படுத்திக்கொண்டு, திட்டத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, சிவகங்கை நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த், நகர்மன்றத் துணைத்தலைவர் கார்கண்ணன், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, சிவகங்கை நகராட்சி ஆணையர் வெங்கட லட்சுமணன், சிவகங்கை வட்டாட்சியர் சிவராமன் உட்பட அனைத்து துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.