சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் நலச்சட்டம் – 2016 தொடர்பான விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் கொடியசைத்து துவக்கி வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை வழங்கி தெரிவிக்கையில்,
தமிழ்நாடு முதலைமைச்சர் மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, அவர்களின் உற்ற தோழனாக திகழ்ந்து வருகிறார். மேலும், அவர்களது கூடுதல் தேவைகளை நிறைவேற்றிடும் பொருட்டு அவர்களுக்கான தனி முகாமினையும், அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே அவ்வப்போது நடத்தப்பட்டு, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கிட வழிவகை ஏற்படுத்தி உள்ளார்.
அவ்வாறு அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் வாயிலாக சிவகங்கை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உரிய பலன்கள் எவ்வித காலதாமதமுமின்றி உடனடியாக வழங்கிட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனை தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரால், தமிழ்நாடு உரிமைகள் என்ற திட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தொடங்கப்பட்டு, அத்திட்டத்தின் கீழ் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், மாற்றுத்திறனாளிகள் குறித்து சமூக தரவுகள் கணக்கெடுப்பு-2023 தொடர்பான பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒருங்கிணைந்த சேவைகள் வழங்கிடும் பொருட்டும், அவர்களுக்கான உள்ளடக்கிய வாய்ப்புகளை மேம்படுத்திட ஏதுவாகவும் இத்திட்டத்தின் ஒரு அங்கமாக அமைகிறது.
இதுதவிர, மாற்றுத்திறனாளிகளுக்கு பயனுள்ள வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் குறித்து அவர்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் நலச்சட்டம் – 2016 தொடர்பாகவும் அவர்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், மாவட்டம் முழுவதும் பயணிக்கின்ற வகையில் விழிப்புணர்வு வாகனம் தொடங்கி வைக்கப்பட்டு, மேற்கண்ட விபரங்கள் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இவ்வாகனம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள உள்ளது.
இதனை மாற்றுத்திறனாளிகள் கருத்தில் கொண்டு தங்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்தும், உரிமைகள் நலச்சட்டம் குறித்தும் முழுமையாக அறிந்து கொண்டு, பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர் புஸ்பராஜ் மற்றும் மாற்றுதிறனாளிகள் சங்கபிரதிநிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.