வாக்கு எண்ணிக்கை மையத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

Share others

39 கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து வேட்பாளர்களின் பிரதிநிதிகளுடன் கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் கலந்தாய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் 39 கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த அறிக்கையினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், முன்னிலையில் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனை மேற்கொண்டு தெரிவிக்கையில்-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கிணங்க 4.6.2024 அன்று கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் கோணம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் சட்டமன்ற தொகுதி வாரியாக அமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி 229, கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு தரைத்தளம், வடக்கு பகுதியில் கிழக்கு பாகம் வகுப்பறை எண் 112,113 -லும் 230, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு தரைத்தளம், வடக்கு பகுதியில் மேற்கு பாகம் வகுப்பறை எண் 115, 116-லும், 231, குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு முதல்தளம் வடக்கு பகுதியில் மேற்கு பாகம் வகுப்பறை எண் 215, 216-லும், 232, பத்மனாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கு முதல்தளம், வடக்கு பகுதியில் கிழக்கு பாகம் வகுப்பறை எண் 212, 213 -லும், 233, விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இரண்டாவது தளம் வடக்கு பகுதியில் மேற்கு பாகம் வகுப்பறை எண் 315, 316-லும், 234, கிள்ளியூர் சட்மன்ற தொகுதிக்கு இரண்டாவது தளம் வடக்கு பகுதியில் கிழக்கு பாகம் வகுப்பறை எண் 312, 313-லும் நடைபெறுகிறது.
கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான தபால் வாக்குச்சீட்டு எண்ணிக்கை மற்றும் சட்டமன்ற தொகுதி வாரியான வாக்குச்சாவடி மையங்களில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணிக்கை ஆகியவற்றை ஒருங்கிணைத்து முடிவுகள் அறிவிக்க, அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, கோணம் முதல்தளம், தெற்கு பகுதியில் கிழக்கு பாகம் அறை எண் 201, 202 மற்றும் 228 வைத்து நடைபெறும்.
வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அதிகாலை 6 மணி வருகை புரிய வேண்டும். காலை 8. மணிக்குள் இறுதி அஞ்சல் வாக்குகள் பெறப்படும் (இதற்கு பிறகு பெறப்படும் தரப்படும் அஞ்சல் வாக்குகள் வாக்கு எண்ணிக்கைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது). அதனை தொடர்ந்து அஞ்சல் வாக்குகள் எண்ணிக்கை ஆரம்பமாகும். 8.30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை ஆரம்பமாகும்.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் வேட்பாளரின் பிரதிநிதியாக வாக்கு எண்ணுகை இட முகவர் இருப்பார். இதன் மூலம் வாக்கு எண்ணும் பணியில் வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்படும். வாக்கு எண்ணும் அறையில் வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர்கள், வாக்கு எண்ணும் உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள், இந்திய தேர்தல் ஆணையத்தால் அதிகாரமளிக்கப்பட்டு உள்ள நபர்கள், தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் தொடர்பாக பணியிலிருக்கும் அரசுப் பணியாளர்கள், வேட்பாளர்கள், அவர்களின் தேர்தல் முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணும் முகவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
வாக்கு எண்ணும் மேஜையில் வாக்கு எண்ணும் செயல்முறைகள் முறையாக நடைபெறுவதற்கு தேர்தல் நுண் பார்வையாளர் பொறுப்பானவர்கள். வேட்பாளர்கள் மற்றும் அவர்களுடைய முகவர்கள் முன்னிலையில் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின்படி வாக்கு எண்ணப்பட வேண்டும். உதவி தேர்தல் நடத்தும் அலுவலருக்கும் வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளுவதற்கு சட்டம் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணும் ஒவ்வொரு மேஜைகளுக்கும் ஒரு வாக்கு எண்ணும் முகவரை நியமிக்க வேட்பாளர்களுக்கு சட்டம் அனுமதியளிக்கிறது.
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களை தங்களுக்கான வாக்கு எண்ணும் இட முகவர்களாக நியமிக்கலாம். கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அல்லது நகராட்சி உறுப்பினர்கள் தொகுதியில் வசிக்கும் உள்ளுர் நபர்கள் ஆகியோரை வாக்கு எண்ணும் முகவர்களாக நியமிக்கலாம். இந்தியக் குடிமகனாக உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களை வாக்கு எண்ணும் முகவராக நியமிக்க யாதொரு தடையும் இல்லை. ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு பணியாளர்களால் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ள நபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக இருப்பின், அவர் தனக்கு அளிக்கப்பட்டு உள்ள ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு பணியாளர்களை தாமாக முன்வந்து திரும்ப பெற்றுக் கொள்வதாகவும், அவர்களை வாக்கு எண்ணும் கூடத்தில் அமர வைப்பதாகவும் உறுதிமொழி அளித்தால், அத்தகைய நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
பாதுகாப்பு பணியாளர்கள் வாக்கு எண்ணும் அறைக்குள் நுழைய அனுமதியில்லை. தற்போது பதவியில் உள்ள மத்திய அல்லது மாநில அரசு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், ஒரு மாநகராட்சியின் மேயர் அல்லது நகராட்சிகள், மாவட்ட ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், மாநில பொதுத்துறை நிறுவனங்கள், அரசு அமைப்புகள், கழக தலைவர்களும், உறுப்பினர்களும், அரசிடமிருந்து யாதொரு மதிப்பூதியம் பெறும் நபர்கள் அல்லது யாதொரு அரசு, அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பகுதி நேரப்பணியில் உள்ள நபர்கள், அரசு, அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணிபுரியும் துணை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுப் பணியாளர்கள், நியாய விலைக்கடை பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள். அரசுப் பணியாளர் (1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 134-A இன் கீழ் இது ஒரு குற்றமாகும். அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களுக்கு 3 (மூன்று) மாதங்கள் வரை சிறைத்தண்டனை, அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்).
வாக்கு எண்ணிக்கை இட முகவர் நியமனமானது படிவம் 18 இல் பூர்த்தி செய்து நியமனம் செய்யப்பட உள்ள முகவர்களின் புகைபடத்துடன், உறுதிமொழியும் பெற்று சமர்ப்பிக்கவேண்டும். அவ்வாறு நியமிக்கப்பட உள்ள வாக்கு எண்ணிக்கை இட முகவர்கள் அனைவரும் தத்தம் நியமனத்தை ஒப்புக்கொண்டதற்கான அடையாளமாக நியமன கடிதத்தில் கையொப்பம் இடவேண்டும். புகைபடத்துடன் கூடிய வாக்கு எண்ணிக்கை இட முகவர்களின் பட்டியலினை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அளிக்க வேண்டும். அவ்வாறு பெறப்பட்ட பட்டியலை சரிபார்த்து வாக்கு எண்ணிக்கை மைய அடையாள அட்டை இட முகவர்களுக்கு வழங்கப்படும். முகவர்கள் வாக்கு எண்ணிக்கை பணிக்கு வரும்போது இந்த அடையாள அட்டைகளை அவர்களின் நியமனக் கடிதங்களுடன் அளிக்க வேண்டும். வாக்கு எண்ணுவதற்கு குறைந்தது 1 மணிநேரத்திற்கு முன்னதாக அவர்களின் நியமன கடிதங்களையும், அடையாள அட்டைகளையும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அளிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் பெறப்படும் யாதொரு நியமன கடிதத்தையும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஏற்க மாட்டார்.
வாக்கு எண்ணுகை இட முகவர்கள் நியமனத்தை ரத்து செய்திட வேட்பாளருக்கு அல்லது அவரது தேர்தல் முகவருக்கு அதிகாரம் உண்டு. வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்ட பின்னர் புதிதாக எவரையும் எண்ணுகை இட முகவராக நியமிக்க இயலாது. ஏற்கனவே நியமிக்கப்பட்ட முகவர்களின் நியமனத்தை ரத்து செய்யவும் இயலாது. அதேபோன்று காலதாமதமாக வரப்பெறும் முகவர்களை வாக்கு எண்ணிக்கை கூடத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டாது.

ஒவ்வொரு வேட்பாளரும் வாக்கு எண்ணும் மேஜைகளின் எண்ணிக்கைக்கு இணையாக வாக்கு எண்ணும் முகவர்களை நியமிக்கலாம். மேலும், முகவர் ஒருவரை தேர்தல் நடத்தும் அதிகாரியின் மேஜையில் கண்காணிப்பிற்காக நியமிக்கலாம். கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரையில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 14 மேஜைகளுக்கு 14 முகவர்களும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மேஜைக்கு 1 முகவர் வீதம் 15 முகவர்கள் நியமிக்கலாம். மொத்தமாக 6 சட்டமன்ற தொகுதிக்கும் 90 முகவர்களை நியமிக்கலாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் தபால் வாக்குகள் எண்ணிக்கைக்கு 20 மேஜைகள் போடப்பட்டு உள்ளது. அதற்காக 20 முகவர்களை தனியே நியமிக்கலாம். அதிகபட்சமாக ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 15 முகவர்களுக்கு மேல் நியமிக்க முடியாது.


முகவர்கள் அவரின் நியமன கடிதத்தையும் தேர்தல் அடையாள அட்டையையும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அளிக்க வேண்டும். அதன் பின்னர் வாக்களிக்கும் ரகசியத்தைக் காத்தல் குறித்த நியமனக் கடிதத்தில் உள்ள உறுதிமொழியில் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் கையொப்பம் இடவேண்டும். நியமன கடிதத்தையும், உறுதிமொழியையும், அடையாள அட்டையையும் சரிபார்த்த பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலர் முகவரை எண்ணுகை கூடத்திற்குள் அனுமதிக்கப்படுவர். யாதொரு எண்ணுகை முகவரையும், எண்ணுகை கூடத்திற்குள் அனுமதிக்கும் முன் அவரது உடலை சோதனை செய்ய தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அதிகாரம் உண்டு. இச்சோதனைக்கு காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட வேண்டும். எண்ணுகை கூடத்திற்குள் ஒழுங்குமுறையினை பேணுவதில் எண்ணுகை இட முகவர்கள் ஒவ்வொருவரும் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு முழுமையான ஒத்துழைப்பு நல்க வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர் பிறப்பிக்கும் உத்தரவு அனைத்தையும் முகவர்கள் ஏற்று செயல்பட வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர் பிறப்பிக்கும் உத்தரவினை மீறி செயல்படுகின்ற யாதொரு நபரினையும் எண்ணுகை கூடத்திலிருந்து வெளியேற்றலாம் என்பதினை எண்ணுகை இட முகவர்கள் அறிந்து செயல்பட வேண்டும். எண்ணுகை நடைபெற்று கொண்டிருக்கும் போது முகவர்களோ, மற்றவர்களோ எண்ணுகை கூடத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். எண்ணுகை முகவர்கள் ஒரு முறை எண்ணுகை கூடத்திற்குள் வந்து விட்டால் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே அவர்கள் சாதாரணமாக வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர்.
குடிநீர், சிற்றுண்டி, கழிவறை போன்றவற்றிற்கான அனைத்து அடிப்படை வசதிகளும் வாக்கு எண்ணிக்கை கூடத்திற்கு அருகில் செய்து தரப்படும் (வேட்பாளர்கள் தங்களுக்கான முகவர்களுக்கு குடிநீர், சிற்றுண்டி வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்). முகவர்கள் அலைபேசி, ஐ-பேட், மடிக்கணினி அல்லது ஒலி அல்லது ஒளியைப் பதிவு செய்யத்தக்க யாதொரு மின்னணு கருவியையும் எண்ணுகை கூடத்திற்குள் எடுத்துவர அனுமதிக்கப்படமாட்டாது. எண்ணுகை முகவர்கள் பேனா, பென்சில், வெற்று காகிதம், குறிப்பு அட்டை, வாக்குச்சாவடி முகவருக்கு தலைமை அலுவலரால் அளிக்கப்பட்ட 17C (வாக்குக் கணக்கு) நகல் ஆகியவற்றை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது அவர்களின் பயன்பாட்டிற்காக, குறிப்பிற்காக வாக்கு எண்ணுகைக் கூடத்திற்குள் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுவார்கள். எண்ணுகை கூடத்திற்குள் புகைப்பிடிக்க அனுமதியில்லை என்பது ஒரு விதியாகத் தவறாமல் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
வாக்கு எண்ணுகை முகவர்களுக்கான இருக்கை ஏற்பாடுகள் அங்கீகாரம் பெற்ற தேசியக் கட்சிகளின் வேட்பாளர்களின் எண்ணுகை முகவர்கள், அங்கீகாரம் பெற்ற மாநிலக் கட்சிகளின் வேட்பாளர்களின் எண்ணுகை முகவர்கள், குறிப்பிட்ட தொகுதியில் தமக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த அங்கீகாரம் பெற்ற மாநிலக் கட்சிகளின் வேட்பாளர்களின் எண்ணுகை முகவர்கள், .பதிவுபெற்ற அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் எண்ணுகை இட முகவர்கள், சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணுகை இட முகவர்கள், வாக்குச் சீட்டில் வேட்பாளர்களின் பெயர்கள் தோன்றும் அதே வரிசையில் எண்ணுகை இட முகவர்கள் அமர்ந்திருக்க வேண்டும்.
எண்ணுகை அறையின் உள்ளே இருக்கின்ற ஒவ்வொரு நபரும் சட்டப்படி வாக்குப்பதிவு ரகசியத்தைக் காக்க வேண்டும். ரகசியத்தைக் காத்திட உதவி புரிய வேண்டும். இவ்வாறு ரகசியத்தை மீறுகின்ற வகையில் யாதொரு தகவலையும் எவருக்கும் தெரிவிக்கக் கூடாது. இது குறித்த சட்ட விதிமுறைகளை மீறும் யாதொரு நபருக்கு மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இவ்விரண்டும் தண்டனையாக விதிக்கப்படுவதற்கு உட்பட்டவராவர் என்பதை அறிய வேண்டும் (1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 128).
தேர்தல் நாளன்று அல்லது தேர்தலுக்கு அடுத்த நாள் தேர்தல் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்யும் போது மாதிரி வாக்கு பதிவின் போது பதிவான வாக்குகளை அழிக்காத நேர்வுகளிலும் அல்லது வி.வி.பேட் இயந்திரத்தில் மாதிரி வாக்கு பதவின் போது பதிவான வி.வி.பேட் சிலிப்களை முழுமையாக, பகுதியாக அகற்றாத நேர்வுகளில் வாக்கு எண்ணிக்கையின் போது இவ்வியந்திரங்கள் தனியாக எடுத்து வைக்கப்பட்டிருக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை சுற்றின் போது இவ்வியந்திரங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும் மேஜைக்கு இவ்வியந்திரங்கள் அனுப்பப்படாமலே அம்மேஜை மட்டும் காலியாக விடப்பட்டு அச்சுற்று முடிவு செய்யப்படும். வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகளுக்கும் மற்றும் படிவம் 17சி-யில் எழுதப்பட்டு உள்ள வாக்குகளின் எண்ணிக்கைக்கும் வித்தியாசம் ஏதும் காணப்பட்டால் அதுவும் மாதிரி வாக்குபதிவின் போது பதிவான வாக்குகளை அளிக்காத நேர்வுகளே ஆகும். இவ்வகையான வாக்குபதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணிக்கையின் போது தனியாக எடுத்து வைத்திருக்க வேண்டும்.
வாக்கு எண்ணிக்கையின் இறுதி வெற்றி வித்தியாசமானது இவ்வகையான வாக்கு பதிவு இயந்திரத்தில் பதிவான மொத்த வாக்குகளை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் இவ்வகையான வாக்குபதிவு இயந்திரங்களை எண்ண வேண்டிய தேவையில்லை.
வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் வெற்றி வித்தியாசமானது வெற்றி பெற்ற வேட்பாளருக்கும், அடுத்த நிலையில் உள்ள வேட்பாளருக்குமான வெற்றி வாய்ப்பு வித்தியாசம் மாதிரி வாக்குப்பதிவு விபரங்கள் அழிக்கப்படாமலும், வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதிக்கப்படாமலும் தனியே எடுத்து வைக்கப்பட்டு உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கையை விட அதிகமாக இருப்பின், இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணாமல், இந்த வாக்குச்சாவடிகளை கருத்தில் கொள்ளாமல், வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படும்.ஒருவேளை வெற்றி வாய்ப்பு வித்தியாசம் மாதிரி வாக்குப்பதிவு விபரங்கள் அழிக்கப்படாமலும், வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதிக்கப்படாமலும் தனியே எடுத்து வைக்கப்பட்டு உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கைக்கு சமமாகவோ அல்லது அதைவிட குறைவாகவோ இருக்கும் பட்சத்தில், இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில் VVPAT Paper Slip -கள் எண்ணப்பட்டு, வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படும். இவைகளின் Control Unit-களை வாக்கு எண்ணிக்கைக்கு பயன்படுத்தக்கூடாது. வி.வி.பேட் இயந்திரத்தில் மாதிரி வாக்குபதிவின் போது பதிவான சீட்டுகளை எடுக்காத நேர்வுகளில் வி.வி.பேட் சிலிப்களை வேட்பாளர்கள் வாரியாக எண்ண வேண்டும். பின் மாதிரி வாக்குபதிவு சான்றின்படி உள்ள வாக்குகளை வேட்பாளர்கள் வாரியாக கழித்து இறுதி வாக்குகளை கணக்கிட வேண்டும். பின் இதன்படி இறுதிச்சுற்றில் வாக்குகளை மாற்ற வேண்டும்.இவ்வாறான வாக்குசாவடி எண்களை, ஐந்து வி.வி.பேட் இயந்திரங்களை ரேண்டமாக தேர்வு செய்து வி.வி.பேட் சிலிப்புகளை எண்ணுகையில் தேர்வு செய்ய குலுக்கலில் சேர்க்கக்கூடாது. வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள சிலிப்புகளை எண்ணும் போது வாக்குபதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும், வி.வி.பேட் சிலிப்புகளின் எண்ணிக்கைக்கும் வேறுபாடு இருந்தால் வி.வி.பேட் சிலிப்புகளில் உள்ள எண்ணிக்கையே செல்லதக்கதாகும்.எனவே, ஐந்து வி.வி.பேட் இயந்திரங்களை ரேண்டமாக தேர்வு போது எண்ணிக்கையில் வேறுபாடு இருந்தால் வி.வி.பேட் சிலிப்புகளில் உள்ள எண்ணிக்கையின் படி இறுதி வாக்கு எண்ணிக்கையில் மாறுதல் செய்ய வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்தார்.
நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், துணை காவல் கண்காணிப்பாளர் யாங்சென் டோமா பூட்டியா, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செந்தூர் ராஜன், உதவி தேர்தல் அலுவலர்கள் காளீஸ்வரி, தமிழரசி, சுப்பையா, கனகராஜ், லொரைட்டா, சுப்புலெட்சுமி, கூடுதல் உதவி தேர்தல் அலுவலர்கள் செந்தில்வேல் முருகன், சாந்தி, அப்துல் முகமது சேக், தேர்தல் தனி வட்டாட்சியர் வினோத், உதவி தேர்தல் வட்டாட்சியர் மணிகண்டன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *