அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் – ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி – மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது.
கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறைகளின் சார்பில் ஆலம்பாறை பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்து மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர், ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இலட்சினை வெளியிட்டு பேசுகையில்-
போக்சோ சட்டம் என்பது பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமாகும். இந்த சட்டம் 2012ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவர்கள், குழந்தைகளை பாலியல் சீண்டல்கள் செய்தவர்கள், பாலியல் ரீதியாக சைகை காட்டுவது, தொலைபேசி, குறுஞ்செய்தி வாயிலாக ஆபாசமாக பேசுவது உள்ளிட்டவர்களுக்கு கடுமையான தண்டணை வழங்கப்பட்டு வருகின்றன.
போக்சோ சட்டத்தினை எவ்வாறு பயன்படுத்துவது என்ற குழப்பம் அனைத்து பெற்றோர்களுக்கும் உள்ளது. அதன் காரணமாக தான் போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு மாவட்ட நிர்வாகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, மாவட்ட சமூகநலத்துறை, மாவட்ட சுகாதாரதுறை, காவல்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வாயிலாக மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் போக்சோ சட்டத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடல் ரீதியாக பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவ உதவி அளிப்பது, குழந்தைகளுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சட்ட உதவி கிடைக்க ஏற்பாடு செய்தல், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விதமான சட்ட விழிப்புணர்வுகளை ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும், தன்னார்வலர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பத்திட பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு குழந்தைகள் நலன் சார்ந்த அனைத்து துறைகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், பள்ளிகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அடையாளம் காணப்பட்டால் உடனடியாக குழந்தைகள் உதவி எண் 1098 அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் எனவும், தொடர்ந்து 15 நாட்களுக்கு மேல் பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை எனில் ஆசிரியர்கள் கண்காணித்தல் வேண்டும். அவை அனைத்தும் ஆசிரியர்களாகிய உங்களின் கடமையாகும். குழந்தைகளின் நலன் காப்பதற்காக அரசு பல்வேறு சட்டங்களை நடைமுறைபடுத்தி வருகிறது. பிஓசிஎஸ்ஓ சட்டத்தில் குற்றவாளிகளுக்கு மிக கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் நபர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும், மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் கற்கும் வயதில் கல்யாணம் வேண்டாமே என்ற இலட்சினை வெளியிட பள்ளி ஆசிரியர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் பாலதாண்டாயுதபாணி, மாவட்ட சமூகநல அலுவலர் (பொ) விஜயமீனா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சகிலா பானு, போக்சோ சிறப்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞர் முத்துமாரி, மாவட்ட தாய் சேய் அலுவலர் துணை இயக்குநர் சுகாதார நல பணிகள் பியூலா, மாவட்ட மெட்ரிக் பள்ளி அலுவலர் (பொ) முருகன், பாதுகாப்பு அலுவலர் பியூலா பெல் ஜெனகா, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் மகிழா, ஸ்ரீவர்த்தினி, ஆசிரியர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.