கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியம், தோவாளை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கட்டப்பட்டு உள்ள கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டபத்தினை செய்தி மக்கள் தொடர்பு துறை இணை இயக்குநர் (நினைவகங்கள்) தமிழ்செல்வராஜன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் கிராமத்தில் சிவதாணுப்பிள்ளை – ஆதிலெட்சுமி இணையருக்கு 1876 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ம் நாள் மகனாக பிறந்தார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. கவிமணி சிறந்த தமிழறிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் குழந்தை பாடல்கள் எழுதியவர். அன்னாருடைய இலக்கிய பணிகளை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு அரசால் தோவாளையில் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளைக்கு முழுதிருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க ரூ.92 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 16.6.2020 அன்று பணிகள் துவங்கப்பட்டது.
தற்போது சில காரணங்களால் பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுவதை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றதன் அடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, கூடுதலாக நிதி ஒதுக்கீடு பெற்று, உடனடியாக பணிகளை விரைந்து முடித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு இணை இயக்குநர் (நினைவகங்கள்) தமிழ்செல்வராஜன் தெரிவித்தார்.
ஆய்வில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் .ஜாண் ஜெகத் பிரைட், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) செல்வலெட் சுஷ்மா, தோவாளை ஊராட்சிமன்ற தலைவர் நெடுஞ்செழியன் கலந்து கொண்டார்கள்.