அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Share others

கன்னியாகுமரி மாவட்ட வருவாய்த்துறை, தோட்டக்கலைத்துறை, மீன்வளத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, முன்னோடி வங்கி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரப்பினர் நலத்துறை, உணவு வழங்கல் துறை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, பேரூராட்சிகள், ஊராட்சிகள், மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, தலைமையில், முன்னாள் அமைச்சரும் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் , நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் முன்னிலையில் ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு தெரிவிக்கையில்-

தமிழ்நாடு முதலமைச்சரின் நல் ஆட்சியில் கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற முறையில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் பேரிடர் காலங்களில் அனைத்து துறையினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொண்டு வரும் விவரங்கள் குறித்து நான் தினந்தோறும் மாவட்ட ஆட்சியாளரிடம் கேட்டு அறிந்து கொண்டேன்.


கடந்த சில தினங்களாக பெய்து வந்த கனமழையின் பாதிப்புகள் குறித்தும், மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் மட்டம் குறித்தும் அழிக்கால் மற்றும் பிள்ளைத்தோப்பு பகுதியில் ஏற்பட்ட பேரலைகளால் மீனவ பொதுமக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பின்னர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது வரை நான் தொடர்ந்து கண்காணித்து வந்தேன்.
நான் 13.10.2024-ம் தேதி அன்று நமது கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக முதல் முறை வந்த பொழுது சுசீந்திரம் பழையாற்றில் ஆகாயத்தாமரை, முட்புதர்கள் வளர்ந்து நீர் செல்லும் பாதை அடைபட்டு இருந்ததை பார்த்து, எனது ஆய்வு கூட்டத்தில் அவற்றை உடனடியாக அகற்ற மாவட்ட ஆட்சியாளருக்கு அறிவுரை வழங்கினேன். அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியாளர் அவர்களின் நிதியில் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பில் நீர் வள ஆதாரத்துறை மூலமாக சுசீந்திரம் பழையாற்றில் பல வருடங்களாக வளர்ந்து ஆற்றில் நீர் தடையின்றி செல்ல இடையூறு ஏற்படுத்திய ஆகாயத்தாமரை மற்றும் பிற முட்புதர்கள் அகற்றப்பட்டு வருவதை தற்பொழுது ஆய்வு செய்தேன்.

தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பாறைகால்மடம் பகுதியில் செல்லும் பறக்கின்கால்வாயில் தூர்வாரிய பணியினையும் ஆய்வு செய்தேன். மேலும் பேரிடர் காலங்களில் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆற்றுப்படுகைகள், கால்வாய்கள், ஓடைகள் உள்ளிட்ட நீர்நிலைகளை சீர்படுத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன்.

மேலும் கடல் அலைகளால் குளச்சல் மற்றும் தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகங்களில் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் அதனை சீர் செய்ய எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றியும் கவனித்து வந்ததோடு, அப்பணிகளை போர்கால அடிப்படையில் சீரமைத்திடவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்புவதும், வெள்ளப்பெருக்கு ஏற்படாதவாறு அணையின் நீர் மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும், உபரி நீர் வெளியேற்றும் போது பொதுமக்களுக்கு உரிய தகவல் அளித்து, உடனுக்குடன் வெளியேற்றப்படுவதையும் தொடர்ந்து உறுதி செய்து வருகிறேன்.

மேலும் இந்த நிகழ்வில் முதியோர் உதவித்தொகை பெற்றுவரும் 74,875 பயனாளிகளுக்கு தீபாவளி புடவை மற்றும் வேஷ்டிகள் வழங்குவது, முதலமைச்சர் பொதுநிவாரண நிதியில் இருந்து 1 பயனாளிக்கு ரூ.2 லட்சம் நிதியுதவியும், 47 பயனாளிக்கு ரூ.47 லட்சம் மதிப்பில் சிங்காரவேலர் மற்றும் ஆதிதிராவிடர் நலம் வீட்டுமனை பட்டாக்கள், தோட்டக்கலைத்துறை சார்பில் விதவை பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் 50 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை வண்டிகள், மீன்வளத்துறை சார்பில் பிரதம மந்திரி மத்சிய சம்பத யோஜனா திட்டத்தின்கீழ் 11 மீனவர்களுக்கு ரூ. 55 லட்சம் மதிப்பில் கண்ணாடி நார் இழை படகு வெளி பொருத்து இயந்திரம், மீன்பிடி வலைகள், குளிர் காப்பு பெட்டி உள்ளிட்ட மீன்பிடி சாதனங்கள் பயனாளிகளுக்கு வழங்கும் ஆணைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்சார்பில் 11 பயனாளிகளுக்கு ரூ.38000 மதிப்பில் நலத்திட்ட உதவிகள், முன்னோடி வங்கியின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.51 லட்சம் மதிப்பில் பல்வேறு கடன்உதவியும், 3 மாணவர்களுக்கு ரூ.7 லட்சம் மதிப்பில் கல்வி கடனுதவிகள், சிறு குறு, நடுத்தர தொழில்துறையின் சார்பில் படித்த வேலை வாய்ப்பு அற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் 12 பயனாளிகளுக்கு ரூ.1.31 கோடி மதிப்பில் அரசின் மானியம் வழங்குதல், கூட்டுறவுத்துறையின் சார்பில் 57 பயனாளிகளுக்கு ரூ.70 லட்சம் மதிப்பில் பல்வேறு விதமான கடனுதவிகள், ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 18 பயனாளிகளுக்கு ரூ.1.01 லட்சம் மதிப்பில் தையல் இயந்திரம் மற்றும் 2 பயனாளிகளுக்கு ரூ.13000 மதிப்பில் தேய்ப்பு பெட்டிகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து மாவட்ட உணவு வழங்கல் துறையின் சார்பில் பயனாளிகளுக்கு 50 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளும், திருவட்டார் வட்டம் பேச்சிப்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட தோட்டமலை மலைப்பகுதியில் எட்டாங்குன்று, வளையந்தூக்கி, தோட்டமலை, சப்பாங்குபாறை, மாறாமலை மற்றும் அருகில் உள்ள மலைகிராமங்களிலும் சேர்த்து பழங்குடியின மக்கள் சுமார் 196 குடும்பங்களுக்கு மாதத்தின் முதல் சனிக்கிழமை அன்று நடமாடும் வாகனம் வாயிலாக நேரிடையாக சென்று நியாயவிலை பொருட்கள் வழங்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு வங்கி கடனுதவிகள், ஊராட்சித்துறையின் சார்பில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடு கட்ட அனுமதி ஆணை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலில் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் சுற்றுலாத்துறையின் சார்பில் விளவங்கோடு வட்டத்திற்கு உட்பட்ட களியல் கிராமம், சிற்றாறு அணை -2 பகுதியில் ரூ.3.40 கோடி மதிப்பில் படகு போக்குவரத்து, ரிசார்ட் மற்றும் சாகச சுற்றுலாத்தளம் அமைப்பதற்கான பணியும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தோவாளை வட்டம், பூதப்பாண்டி பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.1.64 கோடி மதிப்பில் திட்டுவிளை பேருந்து நிலையம் மற்றும் பேருந்து நிலைய வணிக வளாகத்தினை நவீன மயமாக்குதல் பணியினையும், ரூ.1.37 கோடி மதிப்பில் அலங்கார தரைக்கற்கள் பதிக்கும் சாலைப்பணியினையும், கிள்ளியூர் வட்டம், கருங்கல் பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.5.22 கோடி மதிப்பில் காமராஜர் பேருந்து நிலையத்தினை நவீன மயமாக்குதல் பணியினையும், ரூ.0.78 கோடி மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் குடிநீர் திட்டப்பணியினையும், விளவங்கோடு வட்டம், நல்லூர் பேரூராட்சியில் மூலதன மானிய நிதித் திட்டத்தின்கீழ் ரூ.1.22 கோடி மதிப்பில் பேரூராட்சி அலுவலகக்கட்டிடம் கட்டும் பணியினையும், கல்குளம் வட்டம், கப்பியறை பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.0.66 கோடி மற்றும் 0.58 கோடி மதிப்பில் சிமெண்ட்சாலைகள் அமைக்கும் பணியினையும், கிள்ளியூர் பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.1.44 கோடி மதிப்பில் அலங்கார கற்கள் அமைக்கும் சாலைப்பணியினையும், ரூ.1.46 கோடி மதிப்பில் கிள்ளியூர் பேருந்து நிலையத்தினை நவீன மயமாக்குதல் பணியினையும் துவக்கி வைக்கப்பட்டு உள்ளது.
மேலும் ஊராட்சி மற்றும் உள்ளாட்சி துறையின் சார்பில் நடப்பாண்டில் முடிவுற்றுள்ள 843 பணிகள் ரூ.60.75 கோடி மதிப்பீட்டில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுவதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாடு முதலமைச்சரால் உருவாக்கப்பட்டு உள்ள அனைத்து நலத்திட்டங்களும் மற்றும் உட்கட்டமைப்பு பணிகளும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்திட முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ் (குளச்சல்), ராஜேஷ்குமார் (கிள்ளியூர்), தாரகை கத்பர்ட் (விளவங்கோடு), மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் வினய்குமார் மீனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகிதா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருள்சன் பிரைட், கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் சிவகாமி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொ) ஜெங்கின் பிரபாகர், தோட்டகலைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாரதி, மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்புலெட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ், மாவட்ட சுற்றுச்சுழல் பொறியாளர் (பொ) பாரதி, நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சேக் அப்துல் காதர், வட்டாட்சியர் முருகன் (அகஸ்தீஸ்வரம்), கோலப்பன் (தோவாளை), கந்தசாமி (திருவட்டார்), சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசுயா, இந்து அறநிலையக்குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், துறை அலுவலர்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *