மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் பஜனை பட்டாபிஷேக விழா கோலாகலமாக துவங்கியது. நவம்பர் மாதம் 16 ம் தேதி முதல் துவங்கிய பஜனையை தொடர்ந்து பஜனை பட்டாபிஷேக விழா நடக்கிறது. அதன்படி முதல் நாள் தென்மேற்கு மண்டலமும், 2 ம் நாள் வடக்கு மண்டலம், 3 ம் நாள் கிழக்கு மண்டலம், 4 ம் நாள் குதிரைபந்திவிளை மண்டலம், 5 ம் நாள் பண்டாரக்காடு மண்டலம், 6 ம் நாள் பொது பஜனை பட்டாபிஷேகம் என நடக்கிறது. பஜனை பட்டாபிஷேக துவக்க நாளில் மாலையில் நடந்த சிறப்பு திருப்பலி முளகுமூடு வட்டார முதல்வர் அருட்பணி டேவிட் மைக்கிள் தலைமையில் மாடத்தட்டுவிளை பங்குத்தந்தை அருட்பணி மரிய ராஜேந்திரன், இணை பங்குத்தந்தை அருட்பணி அருள் வினிஷ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. தொடர்ந்து பங்குத்தந்தை அருட்பணி மரிய ராஜேந்திரன் தலைமையில் இணை பங்குத்தந்தை அருட்பணி அருள் வினிஷ் முன்னிலையில் பஜனை அர்ச்சிப்பு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.