கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தலைமையில் அய்யன் திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரி கடலில் நிறுவப்பட்டு 25-வது ஆண்டு நிறைவடைவதையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற உள்ள வெள்ளி விழா நிகழ்ச்சியினை வெற்றிகரமாக நடத்துவது குறித்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா அனைத்து துறை அலுவலர்களிடம் தெரிவிக்கையில் –
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் அயராத முயற்சியால் கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி கன்னியாகுமரி கடலில் நிறுவப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலையின் 25-வது வெள்ளிவிழா ஆண்டினை சிறப்பாக கொண்டாடும் வகையில் பல்வேறு முன்னெடுப்பு பணிகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக உலகத்தமிழர்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் வருகின்ற டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1-2025 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ள வெள்ளி விழா கொண்டாட்டத்தை வெற்றிகரமாக நடத்திட கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து துறை அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி கல்வித்துறை ஆசிரியர்கள், தமிழ்ச் சங்கங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் நிகழ்ச்சி நடைபெறக் கூடிய கன்னியாகுமரி விருந்தினர் மாளிகை மைதானத்தில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் மேற்கொண்டிட உதவி இயக்குநர் பேரூராட்சிகள் உள்ளிட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. விழா அரங்கினை சிறப்பாக அமைத்திட பொதுப்பணித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அய்யன் திருவள்ளுவரின் மணற்சிற்பம், புகைப்படக் கண்காட்சி, காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை அழகுப்படுத்திட செய்தி மக்கள் தொடர்பு அலுவலருக்கு அறிவுறுத்தபட்டு உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட உள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை முதல் விவேகானந்தர் பாறை வரை அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி பாலத்தினை விரைந்து முடித்திட நெடுஞ்சாலைத் துறை மற்றும் பூம்புகார் மேலாளருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் சார்பில் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் படகுகளில் அய்யன் திருவள்ளுவர் குறித்த தகவல்களை பதிவு செய்திட பூம்புகார் மேலாளருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. காவல் துறையினர் வாகனங்களை ஒழுங்குபடுத்தி அனைவரும் விழா மேடைக்கு சிரமமின்றி வருவதை உறுதி செய்திட வேண்டும். மருத்துவ குழுவினர் முதலுதவி, அனைத்து வித ரத்த மாதிரி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்திட வேண்டும். தீயணைப்பு துறையினர் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும். வருவாய் துறை, ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மாவட்ட வழங்கல் துறை, கூட்டுறவுத்துறை, மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், குடிநீர் வழங்கல்துறை, உணவு பாதுகாப்பு துறை, சுற்றுலாத்துறை, வனத்துறை உள்ளிட்ட அனைத்து துறையினரும் வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சியினை ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற்றிகரமாக நடத்திட கேட்டுக்கொள்வதோடு, பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தெரிவித்தார்.
ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகிதா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சிவகாமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கனகராஜ், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ஷேக் அப்துல் காதர், வேளாண்மை துறை இணை இயக்குநர் ஜெங்கின் பிராபகர், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, சமூக நலத்துறை அலுவலர் விஜயமீனா, மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்புலெட்சுமி, உதவி ஆணையர் (கலால்) லொரைட்டா, தனி வட்டாட்சியர்கள் சுப்பிரமணியம், வினோத், தாஜ் நிஷா, வட்டாட்சியர்கள் முருகன், ஜூலியன் ஹூவர், சஜித், ராஜசேகர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.