நுள்ளிவிளை ஊராட்சி கிழக்கு காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டம் கொன்னக்குழிவிளையில் நடந்தது. நுள்ளிவிளை ஊராட்சி கிழக்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தலைவர் ஜோசப்ராஜ் தலைமை வகித்தார். பொருளாளர் அஸிஷ் வரவேற்றார். குருந்தன்கோடு கிழக்கு ஒன்றிய தலைவர் பால்துரை முன்னிலை வகித்தார். கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் , குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி உதயம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் 100 ஏழைகளுக்கு அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடையும் வகையில் கமிட்டி செயல்பட ஒவ்வொரு கிராமங்களிலும் ஒரு நிர்வாகியை தேர்ந்தெடுப்பது. மாதம் தோறும் நிர்வாகிகள் கூட்டம் நடத்துவது. பொங்கல் பரிசு பொருட்களுடன் ரூ ஆயிரம் வழங்க தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கொன்னகுழிவிளை ஜிம்மிற்கு இளைஞர்கள் உடல் நலன் கருதி விளையாட்டு உபகரணங்கள் வழங்க கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த்யிடம் ஊராட்சி கமிட்டி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது ஜிம்மை பார்வையிட்ட அவர் விளையாட்டு உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். காங்கிரஸ் நிர்வாகிகள் சாமுவேல் சேகர், ஆல்பட் ஜீவமனி, சாலமோன், மங்களம், வில்லுக்குறி பேரூர் தலைவர் பிரகாஷ் தாஸ், கட்டிமாங்கோடு பேரூர் தலைவர் பெலிக்ஸ் ராஜன், நாகர்கோவில் மாநகர தலைவர் நவீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நுள்ளிவிளை ஊராட்சி கிழக்கு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் ராபின்சன் நன்றி கூறினார்.