சிவகங்கை மாவட்டம், இணைய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு,கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இணைய பாதுகாப்பு நாள் விழாவில் மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது.
இந்த விழாவில், மாணவர்களிடையே இணைய பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தெரிவிக்கையில்,
இன்றைய நவீன காலகட்டத்தில் இணையம் என்பது நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் இன்றியமையதாதாக அமைந்து உள்ளது. அவ்வாறாக உள்ள இணையத்தில் பல்வேறு நன்மையும் உள்ளது, அதேபோன்று தீமையும் உள்ளது. ஒவ்வொருவரும் தங்களுக்கு பயனுள்ள வகையிலான இணையத்தை தேர்ந்தெடுத்து, அதன் மூலம் பயன்பெற்று வருகின்றனர். இணையதளத்தின் வாயிலாக, நாம் பொது அறிவை வளர்த்துக் கொள்ளலாம். நாம் அறிந்து கொள்ள வேண்டியவைகளை மற்றவர்களை நாடாமல் உடனுக்குடன் நம்முடைய கைப்பேசி வாயிலாகவே அறிந்து கொள்ளலாம்.
மேலும், வருங்கால தலைமுறையினரான மாணாக்கர்கள் வலைதளத்தின் வாயிலாக கிடைக்கப்பெறும் எண்ணற்ற ஏனைய பயன்பாடுகளை முறையாக பயன்படுத்திக் கொள்வதும், அதனை தவறாக பயன்படுத்தினால் அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அறிந்து கொள்வது அவசியமாகும். குறிப்பாக, தற்போது இணையதளத்தின் வாயிலாக எண்ணற்ற தகவல்கள், தொலைவில் உள்ள நபர்களை அணுகுதல், பண பரிவர்த்தனை மேற்கொள்ளுதல் என பல்வேறு செயல்பாடுகளுக்கு இணையதளம் அடிப்படையாகவும் அமைகிறது.
தற்போது வளர்த்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம், ஒருங்கிணைந்த கட்டண இடைமுக பரிவர்த்தனைகள் குறித்தும், அதன் பயன்பாடுகள் மற்றும் பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்தும், இரண்டு காரணி அங்கீகாரம் குறித்தும் மாணாக்கர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக, வலைதளத்தினை தவறாக பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் சைபர் குற்றம் குறித்தும் விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும். அவ்வாறாக, ஏற்படும் சைபர் குற்றம் குறித்து, 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வாயிலாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும், மாணாக்கர்கள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் வாயிலாக திறன் மிக்க வல்லுநர்களை கொண்டு எடுத்துரைக்கப்படும் டிஜிட்டல் கைது, தரவு திருட்டு போன்ற கருத்துகளை முறையாக உள்வாங்கி தங்களைச் சார்ந்தோர்களிடம், வலைதள பயன்பாட்டின் முக்கியம் மற்றும் அவசியம் குறித்து எடுத்துரைக்க வேண்டும்.
மேலும், தமிழகத்தில் மாணாக்கர்கள் சிறந்து, திறன் மிக்கவர்களாக விளங்கிட வேண்டும் என்ற அடிப்படையில், கல்வி மற்றும் அவர்களின் தனித்திறன்களுக்கு முக்கியத்துவம் அளித்திடும் வகையில், அரசால் பல்வேறு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கேற்றார்போல் வலைதளத்தினை தங்களது தேவைகளுக்கு மட்டும் சரியான முறையில் பயன்படுத்தி கொண்டு, சிறந்து விளங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
மேலும், இந்த நிகழ்வின் போது இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து, நடைபெற்ற வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணாக்கர்களை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய டி-சர்ட்களை மாணாக்கர்களுக்கு பரிசாக வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட தகவலியல் அலுவலர் (தேசிய தகவல் மையம் ராஜகுரு மற்றும் சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் மனோஜ் குமார் சர்மா, பள்ளி ஆசிரியர்கள்,மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.