இந்திய உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கன்னியாகுமரி மாவட்டத்தில், கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறு மற்றும் குழாய் கிணறுகளில் சிறு குழந்தைகள் விழுவதால் எற்படும் அபாயகரமான விபத்துகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விபரம்.
- ஆழ்துளை கிணறு/ குழாய் கிணறு அமைப்பதற்கு முன்னர் அதன் உரிமையாளர் குறைந்த பட்சம் 15 நாட்களுக்கு முன்னதாக தங்கள் பகுதிகளுக்கு உட்பட்ட மாநகராட்சி/ நகராட்சி/ பேரூராட்சிகள்/ ஊராட்சிகள்/ நீர்வளத்துறை நிலத்தடி நீர் பிரிவு/ பொது சுகாதாரத்துறையில் உள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு எழுத்து பூர்வமாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
- ஆழ்துளை கிணறு அமைக்கும் பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்கள் யின் முழு விபரங்களும் மாநகராட்சி/ நகராட்சி/ பேரூராட்சிகள்/ ஊராட்சிகளில் பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும்.
- ஆழ்துளை கிணறு அமைக்கும் போது கிணற்றின் அருகில் அறிவிப்பு பலகை அமைத்தல் வேண்டும்.
a. ஆழ்துளை கிணறு புனரமைப்பு செய்யும் பொழுது நிறுவனத்தை தொடர்பு கொள்ளும் வகையில் நிறுவனத்தின் முகவரி முழுமையான முகவரியாக இருத்தல் வேண்டும்.
b. ஆழ்துளை கிணற்றின் உரிமையாளரின் முழு முகவரி இருத்தல் வேண்டும். - ஆழ்துளை கிணற்றை சுற்றி பாதுகாப்பு தடுப்புவேலி அமைத்தல் வேண்டும்.
- ஆழ்துளை கிணற்றை சுற்றி 0.50 X 0.50 X 0.60 மீட்டர் (தரை மட்டத்திலிருந்து 0.30 மீட்டர் உயரத்திலும், தரை மட்டத்தில் இருந்து 0.30 மீட்டர் கீழேயும்) சிமென்ட் காங்கிரீட் தளம் அமைத்தல் வேண்டும்.
- ஆழ்துளை கிணற்றை சுற்றி இரும்பு தகடுகள் அல்லது ஸ்டீல் தகடுகள் மூலம் பாதுகாப்பு கவசம் பொருத்தப்பட வேண்டும்.
- ஆழ்துளை கிணற்றில் பராமரிப்பு பணிகள் முடிவு பெற்றவுடன் முழுமையாக கிணற்றை மூடாமல் திறந்த நிலையில் விட்டுச் செல்லக் கூடாது. ஆழ்துளை கிணறு பணிகள் 24 மணி நேரமும் பணி முடியும் வரை பாதுகாப்பாக கவனிக்கப்பட வேண்டும்.
- பணிகள் முடிவு பெற்றவுடன் காணப்படும் சேறு சகதிகள் போன்றவற்றை முழுமையாக அகற்றுதல் வேண்டும்.
- கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை களிமண்/ மணல் பாறைகள்/ கூழாங்கற்கள் போன்றவற்றால் கீழிருந்து தரை மட்டம் வரை நிரப்புதல் வேண்டும்.
- ஒரு குறிப்பிட்ட இடத்தில் துளையிடும் பணிகள் முடிந்ததும், துளையிடும் பணிகள் தொடங்குவதற்கு முன்பு இருந்த தரை நிலைமைகளை மீட்டெடுக்க வேண்டும்.
ஆழ்துளை கிணறு உரிமையாளர்கள் மேற்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் ஆழ்துளை கிணறு கைவிடப்பட்டு காணப்பட்டால் மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 1077 என்ற கட்டணமில்லா தொலைப்பேசிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா கேட்டுக்கொள்கிறார்.