கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் சிவ பக்தர்கள் சிவராத்திரிக்கு முன்தினம் முன்சிறை திருமலை மகாதேவர் கோயிலில் இருந்து சிவாலய ஓட்டம் ஓட துவங்குவார்கள் சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்ளக் கூடிய பக்தர்கள் கிள்ளியூர், விளவங்கோடு, கல்குளம் தாலுகாவில் அமைந்து உள்ள 12 சிவன் கோயில்களுக்கு ஓடுவார்கள். இந்த சிவாலய ஓட்டமானது நாட்டின் வேறு எந்த பகுதியிலும் காண முடியாத சிறப்பாகும் இந்த சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்ளக்கூடிய பக்தர்கள் சிவராத்திரிக்கு ஏழு தினங்களுக்கு முன்பு சிவாலயங்களுக்கு சென்று மாலை அணிந்து விரதத்தை கடைப்பிடிக்க தொடங்கினார்கள் இந்த விரதத்தின் போது இவர்கள் சைவ உணவு மட்டும் சாப்பிடுவார்கள். சிவாலய ஓட்டம் துவங்குவதற்கு முன்தின நாள் ஏகாதசி விரதம் இருப்பார்கள் இந்த ஏகாதசி விரதத்தில் தீயினால் பட்ட எந்த உணவையும் சாப்பிடாமல் இயற்கை உணவுகளாகிய இளநீர், நுங்கு போன்றவர்களை சாப்பிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஏகாதசி விரதத்தை முடித்துவிட்டு சிவபக்தர்கள் சிவாலய ஓட்டத்துக்கு தயாராகி நேற்று காலையில் இருந்து முன்சிறை திருமலை மகாதேவர் கோயிலுக்கு வரத்துவங்கினார்கள். இவர்கள் முன் சிறை திருமலை மகாதேவர் கோயிலின் அருகில் உள்ள மங்காடு தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு முன்சிறை திருமலை மகாதேவர் கோயிலுக்கு வந்து திருமலை அப்பனை தரிசுத்து விட்டு கையில் விசிறியுடன் கோவிந்தா, கோபாலா கோஷத்துடன் ஓட துவங்கினர் சுட்டெரிக்கும் வெயிலை கூட கண்டுகொள்ளாமல் பக்தர்கள் சிவாலய ஓட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு முன் சிறையில் மோர் , சுக்குகாபிகள் வழங்கப்பட்டது. இங்கிருந்து பக்தர்கள் காப்புக்காடு, மார்த்தாண்டம் வழியாக சுமார் 16 கிலோமீட்டர் தூரம் ஓடி குழித்துறை தாமிரபரணி ஆற்றில் அமைந்து உள்ள திக்குறிச்சி மகாதேவர் கோயிலுக்கு வந்தனர். அங்கிருந்து வெள்ளாங்கோடு, அருமனை வழியாக 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திற்பரப்பு வீரபத்திரர் கோயிலுக்கு வந்தனர். அங்கிருந்து குலசேகரம் வழியாக எட்டு கிலோமீட்டர் தூரம் ஓடி திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயிலுக்கு வந்தனர். அங்கிருந்து பொன்மனை வழியாக 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொன்மனை தீம்பிலேஸ்வரர் கோயிலுக்கு ஓடி வந்தனர். அங்கிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தக்கலை – குலசேகரம் ரோட்டில் அமைந்து உள்ள பன்னிப்பாகம் கோயிலுக்கு வந்தனர். அங்கிருந்து ஆறாவது கோயிலாகிய ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கல்குளம் நீலகண்ட சுவாமி கோயிலுக்கு ஓடி வந்தனர். அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தூரம் ஓடி மேலாங்கோடு காலகாலர் கோயிலுக்கும், அங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவிடைக்கோடு சடையப்பர் கோயிலுக்கும் அங்கிருந்து தக்கலை வழியாக ஓடி 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவிதாங்கோடு மகாதேவர் கோயிலுக்கும் ஓடி வந்தனர். அங்கிருந்து பள்ளியாடி வழியாக ஓடி 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருபன்றிக்கோடு பக்தவச்சலர் கோயிலுக்கு ஓடினர் அங்கிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள திருநட்டாலம் சங்கரநாராயணர் கோயிலுக்கு ஓடி ஓட்டத்தை நிறைவு செய்தனர்.முதல் 11 கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக திருநீறு வழங்கப்பட்டது. 12 வது கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக சந்தனம் வழங்கப்பட்டது. சிவாலயம் ஓடிய பக்தர்கள் ஓடினார் ஓடினார் அய்யனாரும் ஓடினார் , முன்சிறை திருமலை மகாதேவர் கோயிலுக்கு ஓடினார் என்ற பாடல்களை பாடி ஓடினர் இவர்களுக்கு காப்புக்காடு திக்குறிச்சி ,பொன்மனை, திற்பரப்பு போன்ற பல்வேறு பகுதிகளில் இரவு கடலை, சுக்கு காப்பி, பழம், காய்கறி கஞ்சி, பானகம் போன்ற பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இன்றும் (26-ம் தேதி) ஏராளமான பக்தர்கள் ஓடிக் கொண்டிருக்கின்றனர் மேலும் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை போன்ற மாவட்டங்களை சேர்த்த தமிழக பக்தர்களும் கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம், கொல்லம் கோட்டயம் போன்ற மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் இருசக்கர வாகனங்கள், கார், வேன்களில் 12 சிவாலயங்களை தரிசித்தனர் . இதனால் சிவாலய ஓட்டம் துவங்கும் முதல் கோயிலாகிய முன்சிறை உட்பட 12 சிவாலயங்களிலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் இருக்க கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்படி போக்குவரத்து போலீசார் போக்குவரத்து பணிகளை மேற்கொள்ள நிறுத்தப்பட்டு இருந்தனர். அதேபோல் பாதுகாப்பு பணிகளிலும் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா அறிவித்து இருந்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் கோலாகலம்
