வாடிக்கையாளர்களுக்கு அஞ்சல் சேவைகளை துரிதமாக வழங்கிட புதிய மேம்படுத்தப்பட்ட மென்பொருள் செயலியை தெற்கு மண்டல அஞ்சல் இயக்குநர் ஆறுமுகம் அறிமுகம் செய்து துவங்கி வைக்கும் விழா தக்கலை தலைமை தபால் நிலையத்தில் நடந்தது. டிஜிட்டல் சிறப்பம்சம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான இந்திய அஞ்சல் துறையின் நெடிய பயணத்தில் ஒரு மைல் கல்லாக, அடுத்த தலைமுறை ஏ.பி.டி 2.0.( அட்வான்ஸ்டு போஸ்டல் டெக்னாலஜி ) மென்பொருள் செயலியை அறிமுகப்படுத்துவதில் தபால் துறை பெருமிதம் கொள்கிறது.
இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக மேம்படுத்தப்பட்ட மென்பொருள் செயல்பாட்டை தெற்கு மண்டலத்தில் முதல்கட்டமாக தக்கலை தலைமை தபால் நிலையம் மற்றும் அதன் அனைத்து துணை, கிளை தபால் நிலைய அலுவலகங்களிலும் தெற்கு மண்டல இயக்குநர் ஆறுமுகம் குத்துவிளக்கேற்றி அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மேம்படுத்தப்பட்ட மென்பொருள் செயலி மூலம் முதல் பார்சல் மற்றும் பதிவு தபாலை புக்கிங் செய்து ரசீதை தெற்கு மண்டல அஞ்சல் இயக்குநர் ஆறுமுகம் வாடிக்கையாளருக்கு வழங்கி துவக்கி வைத்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் குமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார், தக்கலை உபகோட்ட துணை கண்காணிப்பாளர் பரமேஸ்வரன், குழித்துறை அஞ்சல் ஆய்வாளர் கண்மணி, தக்கலை தலைமை தபால் நிலைய அதிகாரி குமார் மற்றும் தபால் நிலைய ஊழியர் மற்றும் ஏராளமான வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவின் முடிவில் குழித்துறை அஞ்சல் கண்காணிப்பாளர் கண்மணி நன்றி கூறினார்.
புதிய மேம்படுத்தப்பட்ட மென்பொருள் செயலி அறிமுகம்
